கடந்த சில தினங்களாக நடிகர் விஷால் பற்றிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் விஷால் ஒரு பெண்ணுடன் ஜாலியாக நடந்து செல்கிறார். இதனை மறைந்திருக்கும் ஒரு நபர் படம் பிடித்துக் கொண்டிருக்க, அதனை பார்த்த விஷால் திடீரென ஷாக் ஆகி தான் அணிந்திருந்த டி ஷர்ட்டால் தன் முகத்தை மூடிக்கொண்டு குடுகுடுவென ஓடுகிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் அந்த வீடியோவில் இருப்பது உண்மையிலேயே விஷால் தானா அல்லது எடிட்டிங் செய்யப்பட்டதா என்றும் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளானது. இதற்குத் தாமாகவே முன்வந்து உண்மையை உடைத்துள்ளார் விஷால். அவர் கூறியிருப்பதாவது “மன்னித்து விடுங்கள், இது உண்மையை உடைக்க வேண்டிய நேரம். அந்த வீடியோ நான் கிறிஸ்துமஸ் நாளுக்காக நியூயார்க் சென்றபோது எடுக்கப்பட்டது தான். ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் நான் அங்கு செல்வது வழக்கம். உண்மையில் அது ஒரு பிராங்க் வீடியோ. என்னுடைய உறவினர்களால் தான் விளையாட்டாக அந்த வீடியோ எடுக்கப்பட்டது” என்றும் அவர் கூறியுள்ளார். ஏற்கனவே நடிகர் விஷாலுக்கு எப்போது திருமணமாகும் என்று ரசிகர்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் விஷால் ஒரு பெண்ணுடன் டேட்டிங் செல்லும் வீடியோ வெளிவந்தவுடன் அந்த பெண் விஷாலின் கேர்ள்பிரண்டாக இருப்பார் என்றும் கிசுகிசுக்கத் தொடங்கி விட்டார்கள். இந்நிலையில் இவை அனைத்திற்கும் தன் விளக்கத்தால் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் விஷால்.