பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்த் கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதன்படி கடந்த நவம்பர் மாதத்தில் தொண்டை வலி, சளி, இருமல் காரணமாக சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து சில நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் கடந்த டிசம்பர் 12ஆம் தேதி பூரண குணமடைந்து வீடு திரும்பியதாக மருத்துவமனை நிர்வாகமும், தேமுதிக நிர்வாகமும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
அதைத்தொடர்ந்து தேமுதிக பொதுக்குழு கூட்டத்திலும் நடிகர் விஜயகாந்த் பங்கேற்றார். அந்தக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளராக விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்றைய முன் தினம் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. வழக்கமான பரிசோதனைக்காக மட்டுமே விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் (டிசம்பர் 28) இன்று வீடு திரும்பி விடுவார் எனவும் கூறப்பட்டது.
— Vijayakant (@iVijayakant) December 28, 2023
ஆனால் தற்போது தேமுதிக நிர்வாகத்தின் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் நடிகர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று செய்யப்பட்டுள்ளதாகவும் மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வென்டிலேட்டர் சிகிச்சை கொடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்செய்தி ரசிகர்கள் மத்தியிலும் தொண்டர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.