நடிகர் விஜயகாந்த் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட நேற்று சென்னை மியாட் மருத்துவமனையில் உயிரிழந்தார். விஜயகாந்தின் மறைவு தமிழகத்தை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரின் இறப்பிற்கு ரசிகர்கள் தொண்டர்கள் என பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இறுதி அஞ்சலிக்காக தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்தின் உடலுக்கு திரைப்பட பிரபலங்களும் அரசியல் பிரமுகர்களும் பொதுமக்களும் திரண்டு வந்து தங்களின் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் திரைப்பட பிரபலங்களான ரஜினி, எம் எஸ் பாஸ்கர், ராம்கி, நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலரும் தங்களின் அஞ்சலியை செலுத்தி விட்டு விஜயகாந்த் குறித்து சில நினைவுகள் பற்றி பேசி வருகின்றனர்.
“சினிமாவிலும் அரசியலிலும் விஜயகாந்த் போன்ற மனிதரை பார்க்க முடியாது. அவருடைய இழப்பு ஈடு செய்ய முடியாதது” என நடிகர் ரஜினி பேசியுள்ளார்.
“உடல் பலமும் மன பலமும் உடையவர் கேப்டன் விஜயகாந்த்” என்று ராம்கி பேசியுள்ளார்.
“கண்ணால் பார்த்த வள்ளலை இழந்துவிட்டோம்” என இசையமைப்பாளர் தேவா கூறியுள்ளார்.
“நடிகர் சங்கத்தை கடனிலிருந்து மீட்டவர். சினிமாவில் யாருக்கு எந்த பிரச்சனை என்றாலும் ஓடோடி வருபவர்” என்று நடிகர் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.
“பூகம்பம் வந்தது போல் மக்கள் கதறி அழுது கொண்டே ஓடுவதை பார்க்கும் போது மக்களிடம் எப்பேர்ப்பட்ட அன்பை விஜயகாந்த் சம்பாதித்து வைத்திருக்கிறார் என்பதை காண முடிகிறது” என்று நடிகர் லிவிங்ஸ்டன் கூறியுள்ளார்.
“இவ்வளவு மக்கள் கூட்டத்தை பார்க்கும் போது தான் மக்கள் விஜயகாந்தின் மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது” என இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் பேசியுள்ளார்.
“நல்ல கலைஞராகவும் நல்ல மனிதராகவும் எல்லாரையும் அரவணைத்துக் கொண்டவர் விஜயகாந்த்” என நடிகர் டெல்லி கணேஷ் கூறியுள்ளார்.
இவ்வாறு விஜயகாந்தின் புகழையும் பெருமைகளையும் பற்றி பேசி வருகின்றனர்.