புது வீடு கட்டி, அதில் குடியேற நினைத்திருந்த விஜயகாந்த், புது வீட்டில் குடிபுகும் முன்பு காலமானார். அதேபோன்று, தன்னுடைய மூத்த மகன் விஜய பிரபாகரன் திருமண நிச்சயதார்த்தம் முடிந்து 4 வருடங்களாகி உள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையில் திருமணம் நடத்த விஜயகாந்த் விரும்பியதாகவும், அதற்கு நேரம் கேட்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
விஜயகாந்த் மரணத்தை தொடர்ந்து, பலரும் அவரின் குடும்ப உறுப்பினர்கள், குறித்து பேசத் தொடங்கி இருக்கின்றனர். விஜயகாந்த் இறுதி நிகழ்ச்சியில் குடும்ப உறுப்பினர்கள், யார் யார் பங்கேற்பார்கள் என்று தேடி வருகின்றனர். முக்கியமாக விஜயகாந்த் மருமகள்கள் எங்கே என்றும் தேடுகின்றனர். விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனுக்கு 2019-ம் ஆண்டு நிச்சயதார்த்தம் ஆனது. கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் இளங்கோவின் மகள் கீர்த்தனாவுடன், விஜய் பிரபாகரனுக்கு நிச்சயம் முடிந்த நிலையில், விஜயகாந்த் உடல்நிலை மோசமானது. கூடவே பிரதமர் மோடி தலைமையில் திருமணம் நடத்த வேண்டும் என்று விரும்பிய விஜயகாந்தின் ஆசையும், நிறைவேறாமல் இருந்தது வந்ததும் திருமணம் தள்ளிப்போனதற்கு காரணமாகச் சொல்லப்படுகிறது.
விஜய பிரபாகரன் திருமணத்திற்காக மோடியிடம் தேதி கேட்பதற்கான நடவடிக்கைகள் ஒருபுறம் நடைபெற்று வந்ததாகவும், மத்திய அமைச்சர்களில் ஒருவர் மூலம் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், ஒருபக்கம் மோடி நேரம் கிடைக்கவில்லை, மற்றொரு பக்கம் விஜயகாந்த் உடல்நிலை மோசமடைந்தது. இதனால், தன்னுடைய மகனின் திருமணத்தைப் பார்க்காமலேயே விஜயகாந்த் காலமானது பெரும்சோகம்.