சென்னை கோயம்பேடு தே.மு.தி.க. தலைமையக வளாகத்தில் அரசு மரியாதையுடன் தே.மு.தி.க. தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. குடும்பத்தினரும், தொண்டர்களும் கண்ணீர் மல்க விஜயகாந்திற்கு பிரியாவிடைக் கொடுத்தனர்.
அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம்!
தீவுத்திடலில் இருந்து ஊர்வலமாக தே.மு.தி.க. அலுவலகத்திற்கு விஜயகாந்த் உடல் எடுத்து வரப்பட்டது. விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் ரசிகர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
நிரந்தர துயில் கொண்ட விஜயகாந்திற்கு தமிழ்நாடு அரசு சார்பில் 72 குண்டுகள் முழங்க மரியாதைச் செய்யப்பட்டது. இரண்டு நிமிடங்கள் மௌனம் கடைபிடித்து விஜயகாந்திற்கு கண்ணீர் அஞ்சல் செலுத்தப்பட்டது.
விஜயகாந்தின் உடலுக்கு தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன், புதுச்சேரி மற்றும் தெலங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் விஜயகாந்தின் உடலுக்கு இறுதி மரியாதைச் செலுத்தினர்.
மறைந்த விஜயகாந்தின் இறுதிச் சடங்கு அவரது குடும்ப வழக்கத்தின் படி நடைபெற்றது. கண்ணீர் மல்க விஜயகாந்தின் மகன்கள் விஜயபிரபாகரன், சண்முக பாண்டியன் சடங்கு செய்தனர். சந்தனப் பேழையில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உடலுக்கு பிரேமலதா விஜயகாந்த், மைத்துனர் எல்.கே.சுதீஷ் மற்றும் குடும்பத்தினர் இறுதி மரியாதைச் செய்தனர்.
விஜயகாந்த் இறுதிச் சடங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு!
விஜயகாந்தின் உடலுக்கு தே.மு.தி.க. தொண்டர் படையினர் முழக்கமிட்டு வீரவணக்கம் செலுத்தினர். குடும்ப வழக்கப்படி நடந்த இறுதிச் சடங்கில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்றனர். இதனிடையே, விஜயகாந்தின் இறுதிச் சடங்கின் போது செல்போன் டார்ச்சை ஒளிரச் செய்து ரசிகர்கள் மரியாதைச் செலுத்தினர். விஜயகாந்தின் இறுதிச்சடங்கைக் காண பாலத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர்.
அடக்கம் செய்யப்பட்ட சந்தனப் பேழையில் ‘புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த்’ என்ற வாசகமும், நிறுவனத் தலைவர் தே.மு.தி.க. எனவும், விஜயகாந்தின் பிறப்பு, இறப்பு தேதிகளும்’ இடம்பெற்றுள்ளன. 50 கிலோ எடைக் கொண்ட சந்தனக் கட்டையில் தயாரித்த பிரத்யேக பேழையில் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.