2023- ஆம் ஆண்டில் இந்திய அளவிலான வணிகங்கள், வணிக நிறுவனங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்!
3டி தொழில்நுட்பத்தில் இயங்கும் டிவியை அறிமுகம் செய்தது சாம்சங்:
எல்லோரும் வியக்கும் வகையில் மைக்ரோ எல்.இ. டிவியை அறிமுகம் செய்துள்ளது சாம்சங் நிறுவனம். இதன் விலை ரூபாய் 1 கோடியே 15 லட்சம் ஆகும். 110 அங்குலத்தில் மிகப்பெரிய ஸ்க்ரீன் கொண்ட இந்த மைக்ரோ எல்.இ.டி. டிவியில் 2 கோடியே 48 லட்சம் எண்ணிக்கையிலான மிகச்சிறிய எல்.இ.டி.க்கள் பொருத்தப்பட்டுள்ளன. காட்சிகளை மிகவும் துல்லியமாகக் காணும் வகையில் 3டி தொழில்நுட்பத்துடன் டிவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஜியோ பாரத் மொபைல் போன் அறிமுகம்:
4ஜி இணைய சேவையுடன் 1,000 ரூபாய்க்கு குறைவான விலையில் மொபைல் ஃபோனை அறிமுகப்படுத்தியது ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம். ஏற்கனவே உள்ள ரிலையன்ஸ் ஜியோ ஃபோனில் இணைய வசதி இல்லாத நிலையில், 4ஜி இணைய சேவையுடன் பாரத் மொபைல் ஃபோன் வெறும் 999 ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டது. இணைய சேவையை கிராம மக்கள் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த மொபைல் ஃபோன் அறிமுகச் செய்யப்பட்டுள்ளதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவர் ஆகாஷ் அம்பானி தெரிவித்தார்.
மடிக்கும் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது சாம்சங்:
ஒரு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய இரண்டு மடிக்கும் செல்போனை அறிமுகப்படுத்தியது சாம்சங் நிறுவனம். பெரிய தொடுத்திரையுடன் வடிவமைக்கப்பட்டுள்ள Galaxy Z Flip 5 ஸ்மார்ட்போனின் தொடக்கவிலை 82,000 ரூபாயாகவும், Galaxy Z Fold 5 ஸ்மார்ட்போனின் விலை 1,47,000 ரூபாயாவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சிறிய டிராக்டர்களை அறிமுகம் செய்துள்ள மஹிந்திரா நிறுவனம்:
சிறு விவசாயிகள் பயன்பெறும் வகையில், சிறிய வகை டிராக்டர்களை அறிமுகம் செய்தது மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம். ‘OJA 2127’ என்ற டிராக்டர்களின் விலை 5.64 லட்சம் ரூபாய். ‘OJA 3140 ரக டிராக்டர்களின் விலை 7.35 லட்சம் ரூபாய் ஆகும்.
மின்சார வாகனங்கள் பக்கம் திரும்பும் இந்திய மக்கள்:
பெட்ரோல், டீசல் விலை அதிகமாக இருக்கும் பட்சத்தில் மின்சார வாகனங்கள் பக்கம் திரும்பியுள்ளனர் இந்திய மக்கள். அதை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் நடப்பாண்டு அக்டோபர் மாதம் வரையிலான 12 மாதங்களில் 14.60 லட்சம் மின்சார வாகனங்கள் விற்பனையாகியுள்ளன.
மும்பை, டெல்லியில் திறக்கப்பட்ட ஆப்பிள் நிறுவன ஷோரூம்கள்:
பிரபல ஆப்பிள் நிறுவனம், மும்பை மற்றும் டெல்லியில் இந்தாண்டு தான் தனது நிறுவனத்தின் பிரம்மாண்ட ஷோரூம்களைத் திறந்தது. கடந்த ஏப்ரல் மாதம் இந்திய வந்த ஆப்பிள் நிறுவனத்தின் செயல் அதிகாரி டிம் குக் , மும்பையில் 22,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்ட ஷோரூம்களைத் திறந்து வைத்தார். இரண்டு ஷோரூம்களும் திறக்கப்பட்ட ஒரு மாதத்திலேயே சுமார் 50 கோடி ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தங்கம் விலை வரலாறு காணாத விலையேற்றம்:
தங்கம் விலை இந்தாண்டு வரலாறு காணாத அளவில் விலையேற்றம் கண்டுள்ளது. 2023- ஆம் ஆண்டு தொடக்க நாளில் ஒரு கிராம் தங்கத்தின் விலை 5,150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது, டிசம்பர் 04- ஆம் தேதி நிலவரப்படி, ஒரு கிராம் தங்கத்தின் விலை 5,975 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்த சென்செக்ஸ்:
இந்திய பங்குச்சந்தைகள் புதிய மைல்கல்லை எட்டியதும் இந்தாண்டு தான். ஆண்டு தொடக்கத்தில் 58,699 புள்ளிகளில் இருந்த மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ், டிசம்பரில் 71,910 புள்ளிகளைத் தொட்டு சாதனைப் படைத்தது. நடப்பாண்டில் சென்செக்ஸ் 16.81% வருவாய் கிடைத்துள்ளது.
புதிய உச்சம் கண்ட நிஃப்டி:
ஜனவரி மாதத்தில் 17,405 புள்ளிகளாக இருந்த தேசிய பங்குச்சந்தையின் நிஃப்டி, டிசம்பர் மாதத்தில் 21,593 புள்ளிகள் என புதிய உச்சம் கண்டது. 2023- ஆம் ஆண்டில் நிஃப்டி சுமார் 17.75% வருவாய் கொடுத்துள்ளது.
முதல் மூன்று இந்திய பணக்காரர்கள் யார்?
விளையாட்டுப் போட்டிகள் முதல் சொத்து மதிப்புகள் வரை எப்போதுமே முதல் மூன்று இடங்கள் தான் அதிக கவனம் பெறுகின்றன. அந்த வகையில், ஃபோர்ப்ஸ் பட்டியலில் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தான் உலக பணக்காரர்கள் பட்டியலில் இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 7,82,000 கோடி ரூபாய் ஆகும். 5.99 லட்சம் கோடி ரூபாயுடன் அதான் குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி இரண்டாமிடத்திலும், ஹெச்.சி.எல். டெக் நிறுவனத்தின் தலைவர் சிவ் நாடார் 2.58 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
ஹெச்.டி.எஃப்.சி நிறுவனம்- ஹெச்.டி.எஃப்.சி வங்கி இணைப்பு!
2023- ஆம் ஆண்டில் பரபரப்பாகப் பேசப்பட்ட செய்திகளில் ஒன்று தான் ஹெச்.டி.எஃப்.சி நிறுவனம், ஹெச்.டி.எஃப்.சி வங்கியுடன் இணைக்கப்பட்டது. இந்த இணைப்பு நடவடிக்கையால் சுமார் 14 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடன் உலகிலேயே நான்காவது மிகப்பெரிய கடன் வழங்கும் வாங்கியாக ஹெச்.டி.எஃப்.சி. வங்கி உருவாகியுள்ளது.
திவால் நிலைக்கு சென்ற GO FIRST விமான நிறுவனம்:
நிதி நெருக்கடி காரணமாக, திவால் நடவடிக்கைகளை மேற்கொள்ள GO FIRST விமான சேவை நிறுவனத்தை வாங்க ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ஆர்வம் காட்டி வருகிறது. 54 விமானங்களுடன் இயங்கி வந்த GO FIRST, கடந்த மே மாதத்தில் இருந்து பறப்பதை நிறுத்திவிட்டது. விமான நிறுவனத்தை வாங்க ஆர்வம் காட்டிய ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தின் பங்குகள் உச்சம் தொட்டது.