2023- ல் இந்தியாவில் நிகழ்ந்த பல்வேறு மாற்றங்கள், சோகங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்!
அதானி குழுமம்:
அதானி குழுமம் முறைகேடாக பங்கு விலைகளைச் செயற்கையாக அதிகரிக்க செய்து, ஆதாயம் அடைந்தது என அமெரிக்காவின் ஹிண்டன்பெர்க் நிறுவனம் குற்றம் சாட்டியது. இதன் விளைவாக, அதானி குழுமத்தின் பங்கு மதிப்பு 8 லட்சம் கோடி ரூபாய் வீழ்ந்தது. உலக பணக்காரர்கள் வரிசையில் மூன்றாவது இடத்தில் இருந்த கௌதம் அதானி பெரும் சரிவைச் சந்தித்தார். எனினும் அதானி நிறுவனத்தின் பங்குகள் விவகாரத்தில் விதிமீறல்கள் எதுவும் இல்லை என உச்சநீதிமன்றம் நியமித்தக் குழு கூறியதன் விளைவாக, அதானி குழு பங்குகளின் விலை கணிசமான ஏற்றம் கண்டனர்.
ஹரியானா வன்முறை:
ஹரியானா மாநிலம், லூவில் நிகழ்ந்த மத வன்முறைகளில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். வன்முறையில் 88 பேர் காயமடைந்தனர். வாகனங்கள் எரிக்கப்பட்டும், பொருட்கள் உடைக்கப்பட்டும் காட்சியளித்த சாலைகள் திகைக்க வைப்பதாக இருந்தது. இந்த வன்முறையில் பொது சொத்துக்களுடன் தனிநபர்களின் சொத்துகளும் நாசமாகின.
காலிஸ்தான் பிரிவினைவாதிகள் மீது நடவடிக்கை:
காலிஸ்தான் பிரிவினைவாதிகள் மீதான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியது. பிரிவினைவாத இயக்கத் தலைவரான அம்ரித் பால் சிங், பஞ்சாப்பில் உள்ள குருத்வாராவில் வைத்து கைது செய்யப்பட்டார். இது பஞ்சாப் மாநிலத்தில் பதற்ற சூழலை ஏற்படுத்தியது.
பரபரப்பை ஏற்படுத்திய ‘பாரத்’:
நாட்டின் பெயர் இந்தியா என்பதில் இருந்து ‘பாரத்’ என மாற்றப்படவுள்ளதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஜி20 மாநாட்டு அழைப்பிதழ் உள்பட சில இடங்களில் ‘இந்தியா’ என்ற பெயருக்கு பதில், ‘பாரத்’ என்ற பெயர் இடம் பெற்றிருந்தது. சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நாட்டிற்கு புதிய பெயர் சூட்டப்படும் என்றெல்லாம் தகவல்கள் கசிந்தன. ஆனால், இவையெல்லாம் வதந்தியாகவே போய்விட்டது.
சாதிவாரி கணக்கெடுப்பை நடத்திய பீகார்:
சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்புக் குறித்த கோரிக்கை, நீண்டக் காலமாக இருந்து வந்த நிலையில், 2023- ல் அதற்கான முதல் நகர்வு தொடங்கப்பட்டது. சட்டப் போராட்டங்களுக்கு பிறகு உச்சநீதிமன்றம் பச்சைக் கொடி காட்டிய நிலையில், பீகாரில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் கிடைத்த தரவுகளின் அடிப்படையில், பிற்படுத்தப்பட்டப் பிரிவினர், மிகவும் பிற்படுத்தப்பட்டப் பிரிவினர், பட்டியலினத்தவர்களுக்கான இடஒதுக்கீட்டை 50% – லிருந்து 65% ஆக உயர்த்தும் மசோதா, அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
மகாராஷ்டிரா அரசியல்:
மகாராஷ்டிரா அரசியலில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகத் திருப்பம் ஏற்பட்டது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரின் உறவினரான அஜித்பவார், கட்சியை உடைத்துக் கொண்டு 37 எம்.எல்.ஏ.க்களுடன் சிவசேனா- பா.ஜ.க. கூட்டணியில் இணைந்தார். அஜித்பவாருக்கு துணை முதலமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது.
டெல்லி மாநில அதிகாரம்:
டெல்லியில் அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம், மாநில அரசுக்கே உள்ளது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அந்த அதிகாரம் மத்திய அரசு வசம் இருக்கும் வகையில், நாடாளுமன்றத்தில் மசோதாக்கள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இது இந்திய ஜனநாயகத்தின் கருப்பு நாள் என்று கூறி டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கவலைத் தெரிவித்தார்.
கைதான மணீஷ் சிசோடியா:
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி துணை முதலமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியா, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதானார். டெல்லி அமைச்சராக இருந்த சத்தியேந்திர ஜெயினை தொடர்ந்து, மணீஷ் சிசோடியாவும் சிறைச் சென்றார். இது அரசியல் ரீதியிலான பழிவாங்கும் நடவடிக்கை என்று ஆம் ஆத்மி கட்சி விமர்சித்தது.
பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் சாதித்த இந்தியா:
பாதுகாப்பு தளவாடங்களை அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடு என்ற நிலையில் இருந்து மாறி, அவற்றை அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடு என்றா பெயரை இந்தியா பெற்றது. தேஜஸ் போர் விமானங்கள், ஏவுகணைகள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவற்றை 85 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது இந்தியா.
சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள்:
உத்தர்காண்டில் மலையைக் குடைந்து சாலை அமைக்கும் பணியின் போது சுரங்கம் இடிந்ததில் 41 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர். சுமார் 17 நாட்கள் பல்வேறு முயற்சிகளுக்கு பின் தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். இதனால் தொழிலாளர்களின் குடும்பத்தினர் மட்டுமல்ல. நாடே நிம்மதி பெருமூச்சு விட்டது.
பணமதிப்பு நீக்கம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு:
பணமதிப்பு நீக்க நடவடிக்கைச் செல்லும் என்பதும், தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் பெற முடியாது என்பதும், 2023- ல் உச்சநீதிமன்றத்தில் மற்ற முக்கிய தீர்ப்புகளாக அமைந்தன.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்:
இந்திய ரயில்வேயில் அடுத்த நகர்வாக ஏராளமான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள், நாடு முழுவதும் இயக்கப்பட்டன. 2019 முதல் 2022 வரை 7 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்ட நிலையில், 2023-ல் மட்டும் சுமார் 30 ரயில்கள் புதிதாக இயக்கப்பட்டன.
வாரம் 70 மணி நேர வேலை- சர்ச்சையை கிளப்பிய பேச்சு!
இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் பணியாற்ற வேண்டும் என்ற இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயணமூர்த்தியின் பேச்சு, 2023- ஆம் ஆண்டில் மிகப்பெரிய விவாதப் பொருளில் ஒன்றாக அமைந்தது.
தலைவர்கள் மறைவு:
2023- ஆம் ஆண்டில் பல முக்கிய பிரமுகர்கள் காலமாகினர். முன்னாள் மத்திய அமைச்சர் சரத்யாதவ், கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி, பஞ்சாப் மாநில முன்னாள் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல் உள்ளிட்டோர் மறைந்தனர். அதேபோல், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், கிரிக்கெட் வீரர் பிஷன் சிங் பேடி உள்ளிட்டோரும் இயற்கை எய்தினர்.
பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு மசோதா:
இந்திய அரசியல் வரலாற்றில் மேலும் ஒரு மைல்கல் 2023- ல் எட்டப்பட்டது. நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதா நீண்ட தாமதத்திற்கு பின் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடரில் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.