தளபதி விஜயின் 68 வது படத்தின் டைட்டில் “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (The Greatest Of All Time)” G.O.A.T என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் வெளிநாடுகளில் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று வெளியான படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் வயதான ஒரு கெட்டப்பிலும் இளமையான தோற்றத்திலும் இரண்டு கதாபாத்திரங்களில் உள்ளார் விஜய். இது உண்மையிலேயே படத்தில் விஜய்க்கு இரட்டை வேடமா அல்லது டைம் டிராவல் கான்செப்டில் இளமையான தோற்றம் மற்றும் முதுமையான தோற்றத்தில் இருப்பாரா என்பது போன்ற விவாதங்கள் சமூக வலைத்தளங்களில் கிளம்பியுள்ளன. ஆளாளுக்கு ஒரு கணிப்பை கூற இப்படம் டி .பி. கூப்பரின் வாழ்க்கையை தழுவிய கதையா என்ற கருத்தும் பரவி வருகிறது. டி.பி. கூப்பர், 1971 ஆம் ஆண்டு ஒரு பை நிறைய பணத்தை திருடி கொண்டு நடுவானில் விமானத்திலிருந்து பாராசூட் மூலம் குதித்தவர். அதன்பின் இவரை அமெரிக்க போலீசாரால் இன்று வரை கண்டுபிடிக்க முடியவில்லை. இன்னும் இவரைப் பற்றிய தகவல்கள் மர்மமாகவே இருந்து வருகின்றன. இந்நிலையில் நேற்று வெளியான படத்தின் போஸ்டரிலும் ஒரு விமானமும் அதன் கீழ் பாராசூட் ஒன்று விழுந்து கிடப்பது போன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே இப்படம் கூப்பர் பற்றிய கதையாக கூட இருக்கலாம் என்று ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றன. இது மட்டுமின்றி ஏற்கனவே இப்படம் வில் ஸ்மித்தின் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான ஜெமினி மேன் படத்தின் சாயலில் இருக்கும் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன. எது எப்படியோ இந்த படத்தைப் பற்றிய டீசர் அல்லது ட்ரைலர் வெளிவரும் வரை இது எந்த மாதிரியான படம் என்பது பற்றி பல வதந்திகள் பரவிக் கொண்டே தான் இருக்கும் என்பது தெளிவாக தெரிகிறது. புத்தாண்டு சிறப்பாக அடுத்ததாக இப்படத்தின் இரண்டாம் லுக் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.