குட்கா, கூல் லிப், கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என தமிழக முதல்வர் உத்தரவிட்டதை அடுத்து சென்னை காவல் துறை தீவிரமாக அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இது போன்ற போதைப் பொருட்கள் வைத்திருந்தாலே அதை யார் விற்பனை செய்கிறார்கள் ?அதன் மொத்த விற்பனை எங்கு நடைபெறுகிறது? விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைத்தல் போன்ற அதிரடி நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்டு பெரும்பாலான அளவில் கட்டுப்படுத்தும் நடவடிக்கைளில் ஈடுபட்டு வருகிறது. இதன் காரணமாக போதைக்கு அடிமையானவர்கள் வலி நிவாரண மாத்திரைகளை பயன்படுத்தி போதை ஏற்றிக் கொள்ளும் பழக்கம் அதிகரித்து வருவதை போலீசார் கண்டறிந்தனர். இதனால் உரிய மருந்து சீட்டு இல்லாமல் எந்த மருந்தகங்களிலும் வலி நிவாரண மாத்திரைகள் போன்றவை கொடுக்கக் கூடாது என்று உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் வலி நிவாரண மாத்திரைகளை பல்வேறு விதமாக வாங்கி நீரில் கரைத்து ஊசி மூலமாக உடம்பில் ஏற்றிக்கொண்டு போதைக்கு அடிமையாவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக புளியந்தோப்பு பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மட்டும் ராகுல் மற்றும் சதீஷ் என்ற இரண்டு இளைஞர்கள் போதை ஊசி காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை யடுத்து வலி நிவாரண மாத்திரைகளை போதை மருந்தாக பயன்படுத்துவதை முற்றிலுமாக தடுப்பதற்கு போலீசார் தீவிர வியூகம் வகுத்தனர். இதுபோன்று வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்தும் வாலிபர்களை போலீசார் பிடித்து எச்சரித்ததோடு மட்டுமல்லாது அவர்களுக்கே தெரியாமல் போதை மாத்திரைகளை எங்கிருந்து வாங்குகிறார்கள் என தனிப்படை அமைத்து விசாரிக்க ஆரம்பித்துள்ளனர்.
வடசென்னையில் உள்ள துணை ஆணையர்கள் தனிப்படை தனித்தனியாக விசாரணை நடத்த ஆரம்பித்தது. தொடர்ந்து நடத்த விசாரணையில் புது வண்ணாரப்பேட்டை பகுதியில் கணேஷ் என்பவர் 50 மாத்திரைகளோடு போலீசாரிடம் சிக்கினார். அடுத்த கட்டமாக கணேசுக்கு யார் வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக சப்ளை செய்வது என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட போது பிகாம் பட்டதாரியான சீனிவாசன் என்பவன் போதை மாத்திரைகளை சப்ளை செய்தது தெரிய வந்துள்ளது. செல்போன் எண்களை பயன்படுத்தாமல் தனது தாயின் செல் போனில் சாதாரணமாக யாரும் கண்டு கொள்ளாத சாதாரண குறுஞ்செய்தி மூலம் போதை மாத்திரைகளை விற்பனை செய்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
சீனிவாசன் அடிக்கடி கொரியர் நிறுவனங்களுக்கு சென்று வருவது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. விசாரணை நடத்தியதில் ஆந்திரா போன்ற பகுதியில் இருந்து போதை மாத்திரைகளை கொரியர் மூலமாக வரவழைத்தும் விற்பனை செய்து வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. கொரியர் மூலமாக மட்டுமல்லாமல் மற்றொரு வகையிலும் போதை தரும் வலி நிவாரண மாத்திரைகளை மொத்தமாக எங்கிருந்து வாங்குகிறார்கள் என்று போலீசார் விசாரணை மேற்கொண்டதில் சீனிவாசனுக்கு, ஸ்டீபன் என்பவர் மூலமாக ஆன்லைனில் வெளி மாநிலங்களில் இருந்து வலி நிவாரண மாத்திரைகளை அதிகளவில் ஆர்டர் செய்து வடசென்னை பகுதிகளில் விற்பனை செய்ய ஆரம்பித்தது தெரியவந்துள்ளது.
குறிப்பாக இந்தியா மார்ட் எனப்படும் ஆன்லைன் விற்பனை இணையதளத்தில் மருந்துகளை மருந்து சீட்டு இல்லாமலேயே அதிக அளவில் ஆர்டர் செய்து பெற முடியும் என்பதை சாதகமாக பயன்படுத்தி வழி நிவாரண மாத்திரைகளை ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து சில்லறை விலைக்கு ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு இளைஞர்களுக்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக 300 ரூபாய்க்கு போதைத் தரும் வழி நிவாரண மாத்திரைகளை வாங்கி 5000 ரூபாய்Narcoticsமொத்தமாக விற்பதும் தெரியவந்துள்ளது. அது மட்டுமல்லாது ஒரு மாத்திரை 200 ரூபாய் என்ற அடிப்படையில் பத்து மாத்திரை அடங்கிய ஒரு ஸ்ட்ரிப் 2000 ரூபாய்க்கு போதை இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்துள்ளது.
குறிப்பாக ஸ்ரீனிவாசன் வடசென்னை பகுதிகளில் கஞ்சா குட்கா கூல் லிப் போன்ற போதை பொருட்கள் கிடைக்காமல் போதைக்காக அலையும் கல்லூரி மாணவர்கள் இளைஞர்களையும் குறி வைத்து இந்த மாத்திரைகளை விற்பனை செய்து வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அதிக அளவு பணம் சம்பாதிக்க செல்போன் மற்றும் செயின் பறிப்புகளில் ஈடுபடும் இளைஞர்களுக்கு வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்து பணம் சம்பாதித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
துணை ஆணையர்களின் தனிப்படை போலீசார் நடத்திய ரகசிய விசாரணையின் மூலமாக வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்தும் இளைஞர்களின் மூலமாக ரூட் எடுத்து மொத்தமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் கும்பலை அதிரடியாக கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சீனிவாசன், ஸ்டீபன் ஆகியோரிடம் இருந்து 600 வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதேபோன்று முத்தையால் பேட்டையில் போதை மாத்திரையை பயன்படுத்திய வாலிபரை பின் தொடர்ந்து மொத்தமாக விற்பனை செய்யும் சுல்தான் அலாவுதீன் என்ற மருந்துகள் விற்பனை செய்யும் பிரதிநிதியை தனிப்படை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 630 வலி நிவாரணம் மாத்திரைகளை பறிமுதல் செய்துள்ளனர்.
இவ்வாறாக அடுத்தடுத்து போதைக்காக வலி நிவாரண மாத்திரைகளை ஆன்லைன் மூலமாகவும், கொரியர் மூலமாகவும், மருத்துவ விற்பனை பிரதிநிதிகள் மூலமாகவும் இளைஞர்களுக்கு விற்பனை செய்யும் போதை விற்பனை கும்பலை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். முற்றிலுமாக வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் தொடர்ந்து தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.