காலத்தை வென்ற கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா நேற்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் அரசியலிலும், திரையுலகிலும் ஒரு தனி வரலாற்றை படைத்துள்ளார். திரை உலகிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்கு நன்றி கூறும் வகையில் நேற்று கலைஞர் 100 விழா பிரம்மாண்டமாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது. இந்த விழாவில் ரஜினி, கமல், சூர்யா, தனுஷ், கார்த்தி, ஜெயம் ரவி என பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். அனைவரும் கலைஞரின் அரசியல் வாழ்க்கை குறித்தும் திரை வரலாறு குறித்தும் புகழாரம் சூட்டினர்.
அந்த வகையில் நடிகர் சூர்யா, “பராசக்தி படத்தில் கைரிக்சா இழுத்து வருபவரை பார்த்து சிவாஜி வருத்தப்பட்டு பேசுவார். நீ வேணும்னா ஆட்சிக்கு வந்து மாத்தி காட்டு என காவலர் பேசும் வசனமும் வரும். பராசக்தி படம் வெளியாகி 17 ஆண்டுகள் கழித்து ஆட்சிக்கு வந்த கலைஞர் கைரிக்சா இழுப்பதை ஒழித்தார். கலைஞர், கலையை அரசியலாகவும் அரசியலுக்கு கலையாவும் மாற்றியவர். திரை உலகில் எழுத்தின் மூலம் சமூகத்தில் பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியும் என டிரெண்டினை செட் செய்ததே கலைஞர் தான். அரசியலில் பல்வேறு மாற்றங்களை நிகழ்த்தியவர். முதலில் அவர் ஒரு படைப்பாளி அப்படிப்பட்ட படைப்பாளிக்கு கலைத்துறையினர்கள் நாங்கள் எல்லாம் சேர்ந்து நூறாவது ஆண்டு விழா கொண்டாடுவதை முக்கியமான விழாவாக நினைக்கிறேன். கலைஞருக்கும் அவரின் எழுதுகோலுக்கும் என் மரியாதைகள். அவரை நேரில் பார்த்திருக்கிறேன் ஆசீர்வாதம் வாங்கி இருக்கிறேன் என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது” என்று பேசி உள்ளார்
அவரைத் தொடர்ந்து பேசிய நடிகர் தனுஷ், “கலைஞர் அவர்களின் அரசியல் சாதனை, சினிமா சாதனைகளை குறித்து பேச எனக்கு அனுபவமோ வயதோ இல்லை. ஒரு படத்தின் பூஜையில் தான் முதன் முதலில் கலைஞரை நேரில் சந்தித்தேன். அங்கு வந்த அவர் என்னை வாங்க மன்மத ராசா என அழைத்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கலைஞரின் மறைவு பற்றி பேசும்போது தான் அவர் மறைந்து விட்டார் என்று தோன்றுகிறது அதுவரை அவர் நம்முடன் இருப்பதாக தான் நினைக்கிறேன். என்று கலைஞர் குறித்து பேசி உள்ளார்.