தமிழ் திரைப்பட நடிகரும், தேமுதிக கட்சித் தலைவருமான கேப்டன் விஜயகாந்தின் மரணம் பலரையும் தீராத சோகத்தில் ஆழ்த்திச் சென்று விட்டது. கடந்த டிசம்பர் 28 அன்று அவர் சென்னையில் காலமானார். தொடர்ந்து அவரது உடல் வளசரவாக்கம் பகுதியில் உள்ள அவரது இல்லத்திலும், அதைத்தொடர்ந்து தீவு திடல் பகுதியில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வசதியாகவும் வைக்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பின்னர் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் அவருடைய உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் கூட விஜயகாந்தின் ரசிகர்களும் தொண்டர்களும் சென்னைக்கு வந்து நேரில் அஞ்சலி செலுத்தினர். பல திரைப் பிரபலங்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அன்றைய தேதியில் வர வாய்ப்பு இல்லாமல் வெளிநாடுகளில் சிக்கிக் கொண்ட நடிகர்களும் சென்னை திரும்பியவுடன் முதலில் விஜயகாந்தின் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தி விட்டு பின்னர் அடுத்த வேலைகளைத் தொடங்கினர். இன்று வரை நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் அவருடைய நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமாவில் இத்தனை ஆண்டுகளாக உச்ச நட்சத்திரமாக இருக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்னும் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தவில்லை எனும் செய்தி ரசிகர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. நயன்தாராவுடன் பணியாற்றிய மூத்த நடிகர்களான ரஜினி, விஜய் உள்ளிட்டோர் கூட நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நிலையில் நயன்தாரா ஏன் இன்னும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தவில்லை எனும் கேள்வி ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் சமீபத்தில் நடந்த கலைஞர் 100 விழாவில் நயன்தாரா கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.