கேப்டன் விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் தேதி சென்னையில் காலமானார். சில ஆண்டுகளாகவே தீராத உடல் நலக்குறைவினால் அவதிப்பட்டு வந்த விஜயகாந்த், உடல்நிலை வெகுவாக பாதிக்கப்பட்டு மூச்சுத் திணறல் ஏற்பட்டு சென்னை போரூர் அருகில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டிருந்தார். அப்போது சிகிச்சை பலனின்றி அவருடைய உயிர் பிரிந்தது. இச்செய்தியைக் கேட்டு லட்சக்கணக்கான ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து அவருடைய உடலைக் காணத் திரண்டனர். ஒரு மனிதன் பணம் சம்பாதிப்பது பெரிதல்ல தன் மீது பாசம் கொண்ட ஒரு கூட்டத்தை சம்பாதிப்பது தான் முக்கியம் என்பதை நம் கண் முன்னே காட்டி விட்டுச் சென்றிருந்தார் கேப்டன் விஜயகாந்த். வெளிநாடுகளில் இருந்தும் கூட இறுதியாக அவருடைய முகத்தைக் காணப் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். தமிழ் திரையுலக பிரபலங்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். நேரில் செலுத்த வர இயலாத பிரபலங்கள் வீடியோ வாயிலாகவும் தங்களுடைய துக்கத்தைப் பகிர்ந்து கொண்டனர். இந்நிலையில் நடிகர் அஜித், விஜயகாந்த் மறைவிற்கு எந்த ஒரு துக்கமும் தெரிவிக்கவில்லை என்றும், நேரில் வந்து கூட அஞ்சலி செலுத்தவில்லை என்றும் பலர் குற்றம் சாட்டி வந்தனர். ஆனால் அதற்கான காரணம் என்ன என்று தற்போது தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி விஜயகாந்தின் வீட்டிற்கு நேரில் சென்று அவருடைய குடும்பத்தாரிடம் ஆறுதல் தெரிவிக்க அதிகாலை 3 மணிக்கு வர அனுமதி கேட்டுள்ளாராம் அஜித். பகலில் வந்தால் கூட்டம் கூடுவார்கள் என்பதால் அதிகாலையில் வருவதற்காக திட்டமிட்டிருக்கிறாராம். ஆனால் கோயம்பேட்டில் தேமுதிக கட்சி அலுவலகத்தில் தான் விஜயகாந்தின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அங்கு 24 மணி நேரமும் அஞ்சலி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அஜித் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த எந்த நேரத்திலும் வரலாம், ஆனால் வீட்டிற்கு அதிகாலையில் வருவது தான் இடையூறாக இருக்கும் என கருதி அனுமதி அளிப்பதில் காலம் தாழ்த்தி வருகின்றனர் என்ற செய்தியும் கிடைத்துள்ளது. எனவே அஜித் விரைவில் கேப்டன் குடும்பத்தாரை சந்தித்து துக்கம் விசாரிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.