கே.ஜி.எஃப் படங்களின் மூலம் நாடு முழுவதும் புகழ்பெற்றவர் பிரசாந்த் நீல். இவருடைய இயக்கத்தில், பிரபாஸ் நடிப்பில் கடந்த டிசம்பர் 22ஆம் தேதி வெளியான திரைப்படம் சலார். இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதை படக்குழுவினர் நேற்று (08.01.2024) கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்த போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. பிரபாஸ், பிரித்விராஜ், ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு, ஸ்ரேயா ரெட்டி, ஈஸ்வரி ராவ் ஆகியோரது நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகிய இப்படம் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன.
இருப்பினும் தொடர் விடுமுறையைக் குறிவைத்து களமிறங்கிய இப்படம் ரிலீஸாகி 17 நாட்களில் உலகம் முழுவதும் சுமார் 600 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட 400 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. இதற்கு முன்னதாக பிரபாஸ் நடிப்பில் வெளியான சாகோ, ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் போன்ற படங்கள் எதிர்மறையான விமர்சனங்களை பெற்ற நிலையில், சலார் படம் அந்த வரிசையில் சேராமல் சற்று ஆறுதல் அளித்தது. என்னதான் பழைய கதையாக இருந்தாலும் படத்தின் மேக்கிங் மிகப்பெரிய பலமாக அமைந்து படத்தை தாங்கிப் பிடித்தது.
இருப்பினும் ஆயிரம் கோடியை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 17 நாட்களில் 600 கோடி என்ற அளவில் நல்ல வசூலைத் தான் இப்படம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக கேக் வெட்டி கொண்டாடிய நிகழ்வில் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல், பிரபாஸ், பிரித்விராஜ், படத்தின் தயாரிப்பாளர் விஜய் கிரகண்டூர், இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் மற்றும் இதர தொழில்நுட்ப கலைஞர்களும் பங்கேற்றனர்.
- Advertisement -