இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிக்காக ராயப்பேட்டை டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள மேம்பாலத்தின் ஒரு பகுதியை இடிக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டப் பணிகள் மூன்று வழித்தடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. புறநகரை இணைக்கும் வகையில் தற்போது நடைபெற்று வரும் மூன்று வழிதடங்களையும் நீடிக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்தது. மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையில் நடைபெற்று வரும் மூன்றாவது வழிதடத்தில் 26 கி.மீ தொலைவிற்கு சிப்காட்டில் இருந்து கேளம்பாக்கம் வழியாக கிளாம்பாக்கம் வரையிலும், பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரை நடைபெற்று வரும் நான்காவது வழித்தடத்தில் பூந்தமல்லி முதல் புதிய விமான நிலையம் வர உள்ள பரந்தூர் வரை 50 கி.மீ தொலைவிற்கும். மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான ஐந்தாவது வழித்தடத்தில் 17 கி.மீ தொலைவிற்கு கோயம்பேடு முதல் திருமங்கலம் முகப்பேர் வழியாக ஆவடி வரையிலும் என மொத்தம் 93 கி.மீ தொலைவிற்கு புதிய வழித்தடங்கள் நீட்டிக்கப்பட உள்ளது.
இந்த நிலையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிக்காக ராயப்பேட்டை டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள மேம்பாலத்தின் ஒரு பகுதியை இடிக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரையிலான ஒரு வழித்தடம் ராயப்பேட்டை வழியாகச் செல்கிறது. டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, மயிலாப்பூர் , மந்தைவெளி ஆகிய இடங்களில் சுரங்கத்தில் மெட்ரோ ரயில் நிலையம் அமைய உள்ளது. இந்த ரயில் நிலையத்துக்கு உள்ளே செல்லும் பாதையும், வெளியே வரும் பாதையும் ராயப்பேட்டை நெடுஞ்சாலை மற்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பு அருகில் அமைகிறது. இதன் காரணமாக பணிகளுக்கு இடையூறாக இருக்கும் மேம்பாலத்தின் ஒரு பகுதியை இம்மாத இறுதியில் இடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பணிகள் முடிவடைந்ததும் மீண்டும் மேம்பாலம் கட்டித் தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.