சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திரைப்படம் அயலான். சிவகார்த்திகேயனின் 14வது படமான இந்த படம் ஐந்து வருடங்களாக கிடப்பில் கிடந்த நிலையில் கடந்த ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் தினத்தை முன்னிட்டு கோலாகலமாக வெளியானது. இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் ஆர் ரவிக்குமார் இயக்கியிருந்த இந்த படத்தை கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் இணைந்து ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏலியன் ஒன்றை மையமாக வைத்து சயின்ஸ் பிக்சன், பேண்டஸி கதைகளத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. வழக்கமான சிவகார்த்திகேயனின் படங்களைப் போல அயலான் படமும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் வண்ணம் அமைந்துள்ளது. எனவே பொங்கல் விடுமுறை நாட்கள் என்பதால் பலரும் திரையரங்குகளுக்கு அயலான் படத்தை காண குடும்பத்துடன் படையெடுத்து செல்கின்றனர். அதேசமயம் அயலான் திரைப்படம் நாளுக்கு நாள் அதிக வசூலை பெற்று தருவதாகவும் வெறும் 4 நாட்களில் 50 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்துள்ளதாகவும் நேற்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் அயலான் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அப்டேட்டை கொடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது “அயலான் 2 நிச்சயமாக வரும். வெறும் பேச்சுக்காக மட்டும் நாங்கள் இதைச் சொல்லவில்லை. உண்மையிலேயே அதற்கான திட்டம் எங்களிடம் இருக்கிறது. இப்போது அயலான் படத்தில் வந்த ஏலியனை உங்களுக்கு எந்த அளவுக்கு பிடித்திருக்கிறது என்பதையும் நாங்கள் உணர்ந்துள்ளோம். மேலும் அதில் இருக்கும் சில குறைபாடுகளையும் அடுத்த பாகத்தில் சரி செய்து இன்னும் சிறப்பான படமாக அதை உருவாக்குவோம்”. என்று கூறியுள்ளார். அயலான் படத்திற்கு ரசிகர்கள் அளித்துள்ள ஆதரவை நேரில் கண்டு களிக்க தியேட்டருக்கு விசிட் அடித்த சிவகார்த்திகேயன் இந்த தகவலை பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.