நயன்தாரா நடிப்பில் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி வெளியான படம் அன்னபூரணி. நயன்தாராவின் 75 வது படமாக வெளியான இந்த படத்தில் ஜெய், சத்யராஜ், கே எஸ் ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் நயன்தாராவுடன் இணைந்து நடித்திருந்தனர். கடந்த சில தினங்களாக அன்னபூரணி படத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் சில வசனங்கள் இடம் பெற்றிருப்பதாக படத்திற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. அதுமட்டுமில்லாமல் ஓடிடியில் வெளியான அன்னபூரணி படத்தையும் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் அதிரடியாக நீக்கியது. இந்த விவகாரத்தில் நயன்தாராவின் அன்னபூரணி படத்திற்காக பல்வேறு தரப்பினரும் தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளனர். அதேசமயம் எதிர்ப்புகளும் கிளம்பிய வண்ணம் இருந்தது.
இந்நிலையில் நடிகை நயன்தாரா தனது சமூக வலைதள பக்கத்தில் அன்னபூரணி பட விவகாரம் தொடர்பாக வருத்தம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “அன்னபூரணி படத்தை வெறும் வணிக நோக்கத்துக்காக மட்டுமல்லாமல் நல்ல கருத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாக தான் பார்த்தோம். மன உறுதியுடன் போராடினால் எதையும் சாதிக்கலாம் என்ற வகையிலேயே அன்னபூரணி படத்தை உருவாக்கினோம். இந்நிலையில் அன்னபூரணி வாயிலாக ஒரு நேர்மறையான கருத்தை கூற விரும்பிய நாங்கள் எங்களை அறியாமலேயே சிலரின் மனங்களை புண்படுத்தி இருப்பதை உணர்ந்துள்ளோம். தணிக்கை குழுவால் சான்று அளிக்கப்பட்டு திரையரங்கில் வெளியான அன்னபூரணி படம் ஓடிடியில் இருந்து நீக்கப்பட்டது சற்றும் எதிர்பாராத ஒன்று. மற்றவர்களின் உணர்வுகளை புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கும் எனது பட குழுவுக்கும் துளி அளவும் கிடையாது. கடவுளின் மீது நம்பிக்கை கொண்டு வழிபாட்டு தளங்களுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் நான் எந்தவித உள்நோக்கத்துடனும் இதை செய்யவில்லை. உங்களின் உணர்வுகளை எந்த வகையிலாவது புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். ஊக்கமும் உத்வேகமும் அளிப்பதே அன்னபூரணி படத்தின் உண்மையான நோக்கமாகும். யார் மனதையும் புண்படுத்துவது அல்ல. எனது 20 ஆண்டு திரைப்பட பயணத்தின் நோக்கம் நேர்மறையான எண்ணங்களை பரப்புவதும் மற்றவர்களிடமிருந்து நல்ல விஷயங்களை கற்றுக் கொள்வது மட்டும்தான் என்பதை மீண்டும் ஒருமுறை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.