விஜயகாந்த் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி… தேமுதிக தலைமை அறிவிப்பு…
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28-ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நுரையீரல் தொடர்பான பிரச்சனையால் கடுமையாக பாதிக்கப்பட்ட அவர் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், கிசிச்சை பலனின்றி அவர் மியாட் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து திரைப்பிரபலங்கள் பலரும் அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ளாத பல திரை நட்சத்திரங்களும், நடிகர் நடிகைகள் மற்றும் இயக்குநர்கள் தேமுதிக அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். வெளிநாடுகளில் படப்பிடிப்பில் சிக்கிக் கொண்ட அனைத்து பிரபலங்களும் தற்போது அவரது நினைவிடம் சென்றும், அவரது இல்லத்திற்கு சென்றும் அஞ்சலி செலுத்துகின்றனர். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் இன்று மாலை நினைவேந்தல் கூட்டம் நடத்தப்பட உள்ளது. தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில், தேமுதிக தலைமை கழகம் சார்பில் முக்கிய அறிவிப்பு வௌியாகி உள்ளது. அதன்படி, வரும் 24-ம் தேதி விஜயகாந்த் நினைவிடத்தில் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில், தேமுதிக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.