கங்குவா திரைப்படத்தில் இணைந்த அயலான் டீம்
அயலான் திரைப்படத்தில் பணியாற்றி குழு ஒன்று தற்போது சூர்யா நடிக்கும் கங்குவா படத்தில் இணைந்துள்ளது.
90-களில் தொடங்கி இன்று வரை தமிழ் திரையில் ஜொலித்துக் கொண்டிருப்பவர் நடிகர் சூர்யா. அவரது நடிப்பில் இறுதியாக எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியானது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்தது. இதையடுத்து விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாக ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த வேடம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. சூர்யாவை எங்கு சென்றாலும் ரசிகர்கள் ரோலக்ஸ் என்று கொண்டாடி வருகின்றனர்.
தற்போது சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கங்குவா. சிறுத்தை சிவா இப்படத்தை இயக்குகிறார். வரலாற்று கதையை பின்னணியாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாகி வருகிறது. படத்தில் பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நாயகியாகவும், பாபி தியோல் வில்லனாகவும் நடிக்கிறார். பிரபல இசை அமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அண்மையில் நடிகர் சூர்யாவின் காட்சிகள் நிறைவு பெற்றதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில், அயலான் படத்தில் பணியாற்றி கிராபிக்ஸ் குழுவினர் சூர்யாவின் கங்குவா படத்தில் இணைந்துள்ளனர். வரலாற்று திரைப்படம் என்பதால், கிராபிக்ஸ் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அயலான் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் அனைவராலும் பாராட்டப்பட்டது. அதனால், கங்குவா படமும் சிறப்பாக அமையும் என்று கூறப்படுகிறது.