தமிழ் திரையுலக நடிகரும் அரசியல் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28 அன்று உடல்நலக் குறைவால் காலமானார். அவருடைய பிரிவின் துயரத்தில் இருந்து இன்னும் நாம் மீண்ட பாடில்லை. அவருடைய ரசிகர்களும் தொண்டர்களும் அவர் மீதுள்ள அன்பை பல்வேறு பரிமாணங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் சினிமாவுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக தென்னிந்திய நடிகர்கள் சங்கம் சார்பில் அவருக்கு நினைவஞ்சலி கூட்டம் நேற்று (ஜனவரி 19) சென்னையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. பல தென்னிந்திய உச்ச நட்சத்திரங்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேப்டனுடனான தங்களுடைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய கமலஹாசன், விஜயகாந்த் பற்றி தன் மனதில் இருந்த பல விஷயங்களை உணர்ச்சிவசப்பட்டு பகிர்ந்து கொண்டார். “பெரிய நட்சத்திரமாக வளர்ச்சி பெற்றும் கூட விஜயகாந்த் பணிவுடன் நடந்து கொண்டார். ஏகப்பட்ட அவமானங்களைக் கடந்து வளர்ச்சி பெற்றவர். மற்றவர்களுடைய பிரச்சனைகளுக்காக தயங்காமல் குரல் கொடுக்கக் கூடியவர். இவருக்காக கூடிய கூட்டம் மக்கள் இவர் மீது வைத்துள்ள அன்பை காட்டுகிறது. நியாயமான காரணங்களுக்காக கோபப்படுபவர். நானும் விஜயகாந்தின் ஒரு படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளேன். நிச்சயம் அவரைப் பின்பற்றி நாமும் அவர் போல் வாழ வேண்டும். குட் பை கேப்டன்” எனக் கூறி நெகிழ்வுடன் நினைவஞ்சலி செலுத்தினார்.
‘தன்னலமில்லாதவர், தைரியமானவர்’…. குட் பை கேப்டன்….நினைவேந்தல் கூட்டத்தில் உருக்கமாக பேசிய கமல்!
-