தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் ஹீரோயினாக நடித்து வரும் நடிகைகள், கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றனர். இவ்வாறு நடிப்பதன் மூலம் அப்படம் நல்ல கதையம்சம் கொண்ட படமாக இருப்பின், அந்த ஹீரோயினுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்து அடுத்தடுத்து பட வாய்ப்புகளை அள்ளிக் கொடுக்கிறது.
அந்த வகையில் நடிகை நயன்தாரா, திரிஷா, சமந்தா, காஜல் அகர்வால் போன்றோர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் நடித்து கவனம் பெற்றனர். அதே சமயம் வளர்ந்து வரும் நடிகைகளான கயல் ஆனந்தி, சுனேனா உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். தற்போது அந்த வரிசையில் பிரபல இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கரும் இணைந்துள்ளார்.
நடிகர் அதிதி சங்கர், கடந்த 2022இல் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்ற அதிதி சங்கர், அதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் நடித்தார். இப்படமும் மாபெரும் வெற்றி பெற்று அதிதி சங்கரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது.
இந்நிலையில் அதிதி சங்கர் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள புதிய படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதேசமயம் இப்படம் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக உருவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.