மகளுடன் சேர்ந்து மோடியை சந்தித்த நடிகர் அர்ஜூன்
கோலிவுட்டில் ஆக்ஷன் கிங் என்றால் அது ஒருவர் தான், அது அர்ஜூன் சார்ஜா. 80-களில் தொடங்கி இன்று வரை ஆக்ஷன் கிங்காகவே திரையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். முதல்வன், தாய் மேல் ஆணை, அடிமை சங்கில், மேட்டுப்பட்டி மிராசு, எங்க ஊரு தம்பி, நான்தான் ராஜா என பல படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. ஜெய்ஹிந் திரைப்படம் அவரது திரைவாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இன்று வரை அனைவரின் விருப்பப் படமும் அதுதான்
ஆரம்பத்தில் ஹீரோவாக மட்டுமே திரையில் ஜொலித்த அவர், தற்போது வில்லனாகவும் ரசிகர்களை மிரட்டி வருகிறார். இரும்புத்திரை, ஹீரோ, கடல் ஆகிய படங்களில் வில்லனாக நடித்திருப்பார். அண்மையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படத்தில் வில்லனாக நடித்திருப்பார். இத்திரைப்படத்தில் ஹரால்டு தாஸ் கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. அவரது மகள் ஐஸ்வர்யாவும் பட்டத்து யானை படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகினார். அண்மையில் அவருக்கும், நடிகர் ராமையா மகன் உமாபதி ராமையாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்தது.
இந்நிலையில், நடிகர் அர்ஜூன் தனது மகளுடன் சேர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார். இதையடுத்து அவர் பாஜக கட்சியில் சேர்ந்ததாக செய்திகள் வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்த அர்ஜூன், அவரை எனது குடும்பத்தில் அனைவருக்கும் பிடிக்கும், அதனால் தான் அவரைச் சந்தித்து எனது ஆஞ்சநேயர் கோயிலுக்கு வருமாறு அழைத்தேன். அது தவிர எந்த அரசியல் காரணமும் இல்லை என தெரிவித்துள்ளார்.