அநீதி எங்கு நடந்தாலும் குரல் கொடுக்க வேண்டும் – கீர்த்தி பாண்டியன்
- Advertisement -

90களில் கோலிவுட்டில் கலக்கிய நடிகர் அருண் பாண்டியனின் மகளும், நடிகையுமானவர் கீர்த்தி பாண்டியன். தமிழில் தும்பா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அப்படத்தில் அவருடன் தர்ஷன் இணைந்து நடித்திருப்பார். இப்படத்தைத் தொர்ந்து அன்பிற்கினியாள் என்ற படத்தில் அவரும், அவரது தந்தை அருண் பாண்டியனும் சேர்ந்து நடித்திருந்தனர். இதனிடையே, பிரபல நடிகர் அசோக் செல்வனை கீர்த்தி பாண்டியன் திருமணம் செய்து கொண்டார். 10 ஆண்டுகளாக காதலித்து வந்த அசோக் செல்வனுக்கும், கீர்த்தி பாண்டியனுக்கும் அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற்று முடிந்தது.

இதையடுத்து, கீர்த்தி பாண்டியன் கண்ணகி என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தில் கீர்த்தி பாண்டியனுடன் அம்மு அபிரதாமி, வித்யா பிரதீப், ஷாலினி ஜோயா, ஆகியோரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து இருந்தனர். நான்கு பெண்கள், நான்கு சூழ்நிலைகள் என கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் யஷ்வந்த் கிஷோர் இயக்கினார். இந்த படத்துக்கு ஷான் ரஹ்மான் இசை அமைத்தார். இத்திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், தேசிய பெண்கள் தினத்தை முன்னிட்டு சென்னை கடற்கரையில் நடைபயணம் நடைபெற்றது. அதை தொடங்கி வைத்த கீர்த்தி பாண்டியன், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பெண்களுக்கு எதிரான அநீதி எங்கு நடந்தாலும் அதை பேச வேண்டும் என தெரிவித்தார். 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை போல், பெண்களுக்கு எதிரான அநீதி தற்போது இல்லை. இது ஒரு தொடர் போராட்டம். அதில் நாமும் இணைந்து கொண்டு தீர்வை வழங்க வேண்டும் என கூறினார்.