இந்திய அளவில் “இசைஞானி”யாகத் திகழ்ந்து வருபவர் இளையராஜா. புலிக்குப் பிறந்தது பூனையாகாது என்பது போல இவருடைய பிள்ளைகளான கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, பவதாரிணி மூவரும் திரைத்துறையில் பல சாதனைகளைப் படைத்துள்ளனர். எதிர்பாராத விதமாக இன்று இளையராஜாவின் மகள் பவதாரிணி உடல் நலக்குறைவால் இசை நிறைந்த இந்த உலகை விட்டுப் பிரிந்து சென்றுள்ளார்.
இளையராஜாவின் மகளான பவதாரிணி 1976 ஜூலை 23ல் பிறந்தவர். சிறுவயதிலேயே இசையின் மீது தீராக் காதல் கொண்டவர். பின்னணிப் பாடகராகவும், இசையமைப்பாளராகவும் உருவெடுத்து இசை மீது தான் கொண்ட காதலை வெளிப்படுத்தினார். ராசையா படத்தில் பாடகராக அறிமுகமானார். தமிழ்,தெலுங்கு, கன்னட படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.இளையராஜாவின் இசையில் உருவான “பாரதி” படத்தில் இடம்பெற்ற “மயில் போல பொண்ணு ஒன்னு…” பாடலைப் புல்லாங்குழலை விட மென்மையான தன் குரலால் பாடியிருந்தார். இப்பாடலுக்காக தேசிய விருதையும் பெற்றார்.அழகி படத்தில் “ஒளியிலே தெரிவது தேவதையா…” பாடல் இவரது குரலில் மலர்ந்ததுதான்.விஷால் நடிப்பில் வெளியான தாமிரபரணி படத்தில் “தாலியே தேவையில்ல…”, அனேகன் படத்தில் இடம்பெற்ற “ஆத்தாடி.. ஆத்தாடி…செம்பருத்தி பூக்காரி..” போன்ற பல பாடல்கள் மிகவும் பிரபலமானவை. இதுவரை சுமார் 30க்கும் மேற்பட்ட படங்களில் பாடல்களைப் பாடியுள்ளார். வெறும் 47 வயதான இவருக்கு, தீராத புற்றுநோய் எமனாக மாறி உள்ளது. கடந்த 5 மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இலங்கையிலேயே இன்று மாலை 5.20 மணியளவில் காலமானார். இச்செய்தி திரைத்துறையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் பவதாரணியின் உடல் நாளை இலங்கையிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. குயிலைப் போல தனித்துவமான குரலைக் கொண்டவர் பவதாரிணி. அவர் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் அவருடைய குரல், காற்றில் கலந்து என்றென்றும் நிலைத்து நிற்கும்.