Homeசெய்திகள்தலையங்கம்ஜனநாயகத்திற்கு பேராபத்தை விளைவிக்கும் தலைவர்கள் - ஊடகத்துறையே உஷார்!! - என்.கே.மூர்த்தி

ஜனநாயகத்திற்கு பேராபத்தை விளைவிக்கும் தலைவர்கள் – ஊடகத்துறையே உஷார்!! – என்.கே.மூர்த்தி

-

ஜனநாயகத்திற்கு பேராபத்தை விளைவிக்கும் தலைவர்கள்

கடந்த சில ஆண்டுகளாக ஊடகத்துறையை சேர்ந்தவர்களை அவமானப் படுத்துவதும், கேளிக்கை செய்வதும், அறிவு மிகுந்த செய்தியாளர்களை அடையாளப்படுத்தி, தனிமைப்படுத்தி, அவர்களை நிலைகுலைய செய்வதும் சில அரசியல் கட்சி தலைவர்களுக்கு கை வந்த கலையாக இருந்து வருகிறது. அது நீண்ட காலமாக செய்தியாளர்கள் அனுபவித்து வரும் ஒரு துயரம். அது தற்போது தான் ஊடகத்துறையில் உயர் பொறுப்பில் இருப்பவர்களுக்கு உறைக்க தொடங்கியுள்ளது.

ஊடகம் என்றால் என்ன? ஊடகத்துறையின் பணி என்ன? அது தற்போது அதனுடைய பணியை சிறப்பாக செய்கிறதா? இல்லையா? இதுபோன்ற இன்னும் சில கேள்விகளுக்கு நாம் விடை தேடி, கண்டுப்பிடித்து அவற்றில் உள்ள குறைகளை களைய வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஊடகத்துறையினர் ஒவ்வொருவரும் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய காலக்கட்டத்தில் இருக்கிறோம்.

ஜனநாயகத்திற்கு பேராபத்தை விளைவிக்கும் தலைவர்கள் - ஊடகத்துறையே உஷார்

ஊடகத்துறை என்பது ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றல்ல, ஜனநாயகத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் நாடாளுமன்றமும், அரசு நிர்வாகமும், நீதிமன்றமும் செயல்படும்போது அந்த ஆபத்தில் இருந்து ஜனநாயகத்தை பாதுகாப்பதும், மீட்பதும் தான் நான்காவது தூண் என்கிற ஊடகத்தின் முக்கிய பணி.

எப்பொழுதெல்லாம் நாடாளுமன்றமும், சட்டமன்றமும் அடித்தட்டு மக்களுக்கு, உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக இல்லாமல், சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக இல்லாமல், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இல்லாமல், பெண்களுக்கு ஆதரவாக இல்லாமல், சமத்துவத்திற்கு எதிராக செயல்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் ஜனநாயகத்திற்கு ஆபத்து என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

நாடாளுமன்றமும் , சட்டமன்றமும் செய்யும் தவறுகளை அப்படியே அச்சு பிழையில்லாமல் அரசு நிர்வாகமும் பின்பற்றும். அச்சூழலில் ஜனநாயகம்  கிண்டலுக்கும் கேளிக்கைக்கும் உள்ளாகும். அதுபோன்ற ஆபத்தில் அகப்பட்டுக் கொள்கிற ஜனநாயகத்தை மீட்டு, பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் நீதித்துறையின் கையில் ஒப்படைக்கப்படுகிறது. பல நேரங்களில் நீதித்துறை ஜனநாயகத்தை பாதுக்கும் பணியை சிறப்பாக செய்திருக்கிறது. சில நேரங்களில் நீதித்துறையும் தவறு செய்து ஜனநாயகத்தை கேளிப்பொருளாக மாற்ற முயற்சிக்கிறது.

அரசியல் வாதி ஒருவரால்

நாடாளுமன்றம், அரசு இயந்திரம், நீதித்துறை ஆகிய மூன்று துறைகளும் கடமையில் இருந்து தவறி, திசை மாறி செல்லும்போது, ஜனநாயகத்திற்கு ஆபத்து ஏற்படுகிறது. அப்போது நான்காவது தூண் என்று மார்தட்டிக் கொள்ளும் ஊடகத்துறை துணிந்து, முதுகெலும்புடன் ஜனநாயகத்தை பாதுகாக்கவும், மீட்கவும் முன்வரவேண்டும். உதாரணமாக “மிசா” காலத்தில் ஜனநாயகத்திற்கு பெரும் ஆபத்து ஏற்பட்டது. அப்பொழுது அதிகாரப்போதையில் இருந்த அரசியல் வாதி ஒருவரால்  அரசியல் சட்டம் காலில் போட்டு மிதிக்கப்பட்டது, அரசு இயந்திரத்தை விளையாட்டு பொம்மையாக மாற்ற முயற்சிக்கப்பட்டது, அப்போது நீதித்துறையும், பத்திரிக்கை துறையும் உறுதியாக நின்று ஜனநாயகத்தை பாதுகாத்தது.

காலத்தின் இயக்கத்தில் அவ்வப்போது ஜனநாயகத்திற்கு ஆபத்து ஏற்படும். அரசியல் கட்சிகளாலோ, இயக்கங்களினாலோ அல்லது ஒரு தலைவராலோ ஜனநாயகத்திற்கு எப்பொழுதாவது ஒருமுறை ஆபத்து நிகழும். அந்த ஆபத்து இப்பொழுது வந்திருக்கிறது. நமது கண்ணெதிரே நடந்து கொண்டிருக்கிறது. சிறுபான்மை – பெரும்பான்மை இடையே முரண்பாடுகள் முற்றி வருகிறது. ஒரு தரப்பு மக்களின் உரிமை, அவர்களின் சுதந்திரம் பறிக்கப்படுகிறது.

மணிப்பூர் என்கிற ஒரு மாநிலம் நம் கண்முன்னே பற்றி எரிந்தது. நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள், ஆயிரக்கணக்கான மக்கள் வீடு வாசலை இழந்து, வாழ்வாதாரத்தை இழந்து நிர்க்கதியாக நின்றனர். அங்கே ஜனநாயகம் சிதைந்து சுக்கு நூறாக உடைந்து நிர்வானப்படுத்தப்பட்டது. அதை ஒரு தூண்களாலும் தடுக்க முடியவில்லை. அந்த மக்களை காப்பாற்ற முன்வரவில்லை. நீதி பெற்றுத்தர முடியவில்லை. எல்லோரும் மௌனமாகவே தற்போதுவரை கடந்து செல்கிறோம்.

அந்த ஆபத்து கொஞ்சம் கொஞ்சமாக வடமாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கும் பரவி வருகிறது. அரசு நிர்வாகத்திலும், நீதித்துறையிலும், ஊடகத்துறையிலும் ஊடுருவி “கரையான் செல்” போன்று பரவி வருகிறது. அந்த ஆபத்தின் ஒரு பகுதி தான் ஊடகவியலாளரை தாக்குவதும், அவர்களை நிலைகுலைய செய்வதுமாகும்.

ஜனநாயகத்திற்கு பேராபத்தை விளைவிக்கும் தலைவர்கள் - ஊடகத்துறையே உஷார்!! - என்.கே.மூர்த்தி

ஊடகத்துறையை, ஊடகத்தில் பணி செய்பவர்களை, ஊடகத்தில் உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்களை ஒரு அரசியல் கட்சியின் தலைவர் மிக மோசமான வார்த்தைகளை, சொல்லாடலை பயன்படுத்தி விமர்சனம் செய்கிறார் என்றால் அவருக்கு அந்த துணிச்சலை கொடுத்தது யார்?

அதிகார போதையில் “பல்லுபடாம……. என்றும் மன்னிப்பு கூந்தல்… என்றும் இந்த மாதம் பேட்டா… என்றும் ” ஊடகத்துறையை, ஜனநாயகத்தை அவமானப்படுத்தும் செயலை தொடர்ந்து செய்து வருகிறார்.

இன்னொருவர் நீதிமன்றமாவது…….ம…. ஆவது என்று துணிச்சலாக ஜனநாயகத்தின் முக்கிய பாதுகாப்பையே மிரட்டுகிறார்.

அந்த மனிதர் யார்?

அவர் ஒரு பயிற்சி பெற்ற மனிதர். அவர் வேலை என்ற பெயரிலும், ஊதியம் என்ற பெயரிலும், நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரிலும், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு என்ற பெயரிலும் கடினமாக பயிற்சி பெற்ற மனிதர். அவர் பெற்ற பயிற்சியில் மிகவும் முக்கியமானது சிந்திக்கக் கூடாது, அதுவும் சுயமாக சிந்திக்கக் கூடாது, கடி என்றால் கடிக்க வேண்டும், அடி என்றால் அடிக்க வேண்டும், சுடு என்றால் ஈவு இரக்கம் இல்லாமல் சுட வேண்டும், மூளையை பயன்படுத்த கூடாது, உத்தரவு வரும்வரை காத்திரு போன்ற பிரத்யேகமான பயிற்சி பெற்றவர். அப்படிப்பட்ட நபருக்கு ஜனநாயகம் என்றால் என்ன என்று தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. அவருக்கு ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டிய அவசியமும் இல்லை.

அப்படி பயிற்சி பெற்ற நபரை ஒரு கட்சியின் மாநில தலைவராக நியமனம் செய்து அனுப்பி வைத்திருக்கிறார்கள் என்றால் அனுப்பியவர்களின் நோக்கம் என்ன? அவர்களின் திட்டம் என்ன? இன்னும் என்னென்ன செய்யப்போகிறார்கள்? நினைத்து பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது.

நாடாளுமன்றம், அரசு இயந்திரம், நீதித்துறை

 

அந்த வரிசையில் தமிழ்நாட்டில் இரண்டு மூன்று தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பொய் பேசுகிறார்கள், பொய்யை மட்டுமே பேசுகிறார்கள், அதையே திரும்ப திரும்ப பேசுகிறார்கள், மக்கள் நம்புகின்ற வகையில் பேசுகிறார்கள், மக்கள் நம்பும் வரை பேசுகிறார்கள். ஒரு கட்டத்தில் அவர்களின் பேச்சை மக்கள் நம்பத் தொடங்கிவிடுகிறார்கள். அந்த செல்வாக்கின் வாயிலாக ஜனநாயகத்தை தாக்குவது, ஜனநாயகத்தை கேள்வி குறியாக்குவது, ஜனநாயகத்தை சிதைப்பது இதுவே அவர்களின் முதன்மையான திட்டம்.

ஜனநாயகம் சிதைந்தால் மனிதர்களுக்குள்ளேயே முரண்பாடுகள் அதிகரிக்கும். மத முரண்பாடு என்றும் மொழி முரண்பாடு என்றும், சாதி முரண்பாடு என்றும் , வர்க்க முரண்பாடு என்றும், தனி மனித முரண்பாடு என்றும், இவ்வாறு முரண்பாடுகள் அதிகரிக்க அதிகரிக்க வெறுப்புணர்ச்சிகள் அதிகரிக்கும். கலவரம் ஏற்படும். மனிதனும் மனிதத் தன்மையும் சிதறிபோகும். நீயும் நானும் ஒன்றல்ல, நீ வேற ஆள் நான் வேற ஆள். நான் உன்னைவிட, உன் சமுதாயத்தை விட , உன் கடவுளை விட மேலானவன் என்ற கட்டமைப்பு உருவாக்கப்படும். அதுவே அவர்களின் அரசியல் ஆதாயம், மனித முரண்பாடுகளே பாசிச அமைப்புகளின் மூலதனம். மக்களும், ஊடகத்துறையும் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது.

 

MUST READ