ஆதி மனிதன் மொழியை கண்டுபிடித்து, பேசும் ஆற்றலை பெற்று, சுயமாக சிந்திக்க தொடங்கியதும் அவனுக்குள் எழுந்த முதல் கேள்வி
“நான் யார்?”
வானம், பூமி என்ற எல்லையற்ற பிரபஞ்சத்தில் திசைத் தெரியாமல் தவித்த அந்த ஆதி மனிதனின் சிந்தனையில் அந்த கேள்வி பிறந்தது.
உலகில் தோன்றிய கேள்விகளுக்கு எல்லாம் மூலக் கேள்வியாக அதுவே இருந்தது.
பல ஆயிரம் ஆண்டுகளாக அந்த கேள்வியை வைத்துக் கொண்டு மனிதன் விசாரணை நடத்தினான், விவாதம் செய்தான். ஆனால் இன்றுவரை அதற்கு விடை கிடைக்கவில்லை.
அவசர உலகில், முடிவில்லா வாழ்வில், துன்பமும், துயரமும் வாட்டி வதைக்கும் இந்த வாழ்வில் ஒவ்வொரு மனிதனும் “நான் யார்?” என்பதை தேடிக்கொண்டே இருக்கிறான். அந்த தேடுதல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இந்த உலகம் எவ்வளவோ மாறிவிட்டது, நாகரீகங்கள் தோன்றியது, வளர்ந்தது, சிதைந்தது. மீண்டும் ஒரு புதிய உலகம் பிறந்துவிட்டது. படிப்படியாக மனித அறிவு வளர்ந்தது. நிலாவிலும் கால் வைத்துவிட்டான். சந்திர மண்டலம், சூரிய மண்டலம் என அனைத்தையும் ஆய்வு செய்து வருகிறான்.
கணக்கில் அடங்காத கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து விட்டான், அவிழ்க்க முடியாத புதிர்களை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக கண்டுக்கொண்டான். ஆனால் மனிதன் தன்னைப்பற்றி மட்டும் இன்னும் அறிந்து கொள்ள வில்லை.
இந்த உலக வாழ்வை கடந்து, காலத்தை கடந்து, துன்பத்தையும், துயரத்தையும் கடந்து, மரணத்தை கடந்து மனிதன் மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும் வாழ்வது எப்படி என்று ஆதி மனிதன் கனவு கண்டான். அந்த கனவே அழியாத ஆன்மா என்றும், ஆவி உலகம் என்றும், அடுத்த பிறவி என்றும், சொர்க்கம் என்றும், நரகம் என்றும் ஒரு புதிய கருத்துலகத்தை கண்டுப்பிடித்தான்.
இந்த பூமிக்கு அப்பால், நாம் பிறந்து, வாழ்ந்து, மடியும் இந்த உண்மையான உலகத்திற்கு அப்பால், நாம் உணர்ந்து, பட்டறிந்து கொள்ளும் இந்த சமூக உறவுகளுக்கு அப்பால் மனிதன் ஒரு புதிய உலகத்தை கற்பனை செய்து கொண்டான்.
இயற்கைக்கு மாறாக,பகுத்தறிவுக்கு புறம்பாக கற்பனையான ஒரு இந்திரலோகத்தை படைத்துக் கொண்டான். அந்த அந்நிய உலகத்தில் அபூர்வ பிறவியாக வாழவும் தொடங்கினான். அதனால் பூமியில் புதைந்து கிடந்த மனிதனின் பூர்விக வேர் பிடுங்கி எறியப்பட்டது. மனிதனின் அடி மனதில், ஆழ் மனதில் “ஆன்மா” ஒன்று புகுந்து கொண்டது. அந்த ஆன்மாவின் ரகசியத்தை மனிதன் தேடத் தொடங்கினான். அதனால் தோன்றிய கேள்வி தான் “நான் யார்?” “நான் எங்கிருந்து வந்தேன்?” “நான் எதற்காக இங்கு வந்தேன்?” என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டான்.
இந்த கேள்விகளும் அதற்கு கிடைத்த பதில்களும் அதனால் எழுந்த பொய்யான கருத்துகளும், கதைகளும் மனிதனை இந்த உண்மையான உலகத்தில் இருந்து அந்நியப்படுத்தியது.
மனித குல வாழ்விற்கு விசித்திரமான வியாக்கானங்களும், விதவிதமான கற்பனை கதைகளும் கொடுக்கப்பட்டன.
வியாக்கியானங்களையும், விதவிதமான கற்பனை கதைகளையும் ஆழமாக பற்றிக் கொண்ட மனிதனின் மனம் சிந்திக்கின்ற ஆற்றலை முழுமையாக இழந்து விட்டது. அறிவாளிகள் மீது வெறுப்பு உணர்ச்சியை காட்ட வைத்தது, கோபப்பட வைப்பது அல்லது அறிவாளியை கண்டால் அலறி அடித்து ஓட வைக்கிறது. பொய்யான கருத்தில் சிக்கிக் கொண்ட நமது மனம், எல்லாம் எமக்கு தெரியும் என்ற எண்ணத்தில் போலியான மாயை உலகத்தை உருவாக்கிக் கொண்டது.
ஆன்மா உலகம் ஒன்று இருக்கிறது என்றும் அந்த உலகத்தில் இருந்து நாம் இங்கு வந்து வாழ்ந்துவிட்டு செல்லும் விருந்தாளி என்றும் விதி என்ற நாடகத்தில் நாம் நடிக்க வந்தவர்கள் என்றும் கதை கதையாக போதிக்கப்பட்டு அந்தப் போதனையில் இருந்து மீண்டு வரமுடியாமல் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக போலியான உலகத்தில் போலியான வாழ்க்கையையே வாழ்ந்து வருகிறோம்.
சில மனிதர் இந்த பொய்யான உலக வாழ்வில் இருந்து விடுபடுவதற்காக உறவுகளை துறந்து, உலக வாழ்வை துறந்து பரிபூரண துறவியாக மாறினால் மெய்பொருளை காணலாம் என்று முயன்றார்கள், தேடினார்கள்.
ஆன்மா என்றால் என்ன? இந்த உடலுக்குள் ஆன்மா எப்படி வந்தது? ஏன் வந்தது? இந்த உடலை விட்டு ஆன்மா எப்படி வெளியேறுகிறது? அது ஏன் வெளியேறுகிறது? மனிதனின் உடலுக்குள் வரும் ஆன்மாவிற்கும் மற்ற உயிரினங்களுக்குள் வரும் ஆன்மாவிற்கும் என்ன வேறுபாடு? என்று ஏராளமான கேள்விகளை எழுப்பி, அந்த கேள்களுக்கு, சந்தேகங்களுக்கு விடை தேடியவர்கள் தத்துவ ஞானிகளாகவும், சித்தர்களாகவும், துறவிகளாகவும் மாறினார்கள்.
இந்த விபரீதமான ஆன்மீக விசாரணையில் “நான் யார்?” என்ற தேடுதலில் அவர்களுக்கு கிடைத்த விடை “நான் ஒரு பொய்” என்ற கண்டுப்பிடிப்புடன் முடித்துக் கொண்டார்கள்.
எனவே, மனிதன் தன்னை “நான்” என்று சொல்லிக் கொள்கிறானே அது எது? நான் என்பது உயிரா? உடலா? அறிவா? ஆன்மாவா? என்ற தேடுதலில் இறங்கியவர்கள் எல்லோரும் இந்த உலகத்திற்கு வழிகாட்டக்கூடிய ஞானியாக மாறினார்கள் என்பதோடு அவர்கள் எல்லோரும் நான் யார்? என்ற விசாரணையில் இறங்கி இறுதியில் கடவுள், ஆன்மா என்பது ஒன்று இல்லை.
கடவுள் தன்மை ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கிறது என்று புத்தர், இராமகிருஷ்ணர், ஓஷோ போன்ற ஏராளமான ஞானிகள் அறிவுரையும் வழங்கியிருக்கிறார்கள்.