பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி உடல் நல குறைவு காரணமாக உயிரிழந்தார். தன்னலம் கருதாத பொது நலவாதியாக வாழ்ந்து மறைந்த விஜயகாந்தின் மறைவு தமிழகத்தையே பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்று வரையிலும் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு சென்று பொதுமக்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதைத்தொடர்ந்து தொலைக்காட்சிகளிலும் விஜயகாந்த்திற்கு சமர்ப்பணம் செய்யும் விதத்தில் பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றனர்.
இந்நிலையில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் ரப்பர் பந்து திரைப்படம் விஜய் விஜயகாந்த்தை கௌரவிக்கும் படமாக உருவாகி வருகிறது. இது தொடர்பாக படத்தின் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில், “விஜயகாந்த் தான் எங்களுக்கு சூப்பர் ஸ்டார். அதனால் நான் விஜயகாந்துக்கு மரியாதை செலுத்தும் வகையில் படம் ஒன்று பண்ண வேண்டும் என்று நினைப்பேன். அதன்படி லப்பர் பந்து படத்தில் நடிகர் தினேஷ் விஜயகாந்தின் தீவிர ரசிகனாக நடித்துள்ளார். படம் முழுவதுமே கேப்டன் விஜயகாந்தின் ரெஃபரன்ஸ் இருந்து கொண்டே இருக்கும். நான் பார்த்து ரசித்த விஜயகாந்தை என் படத்தில் கொண்டாட வேண்டும் என்று நினைத்தேன். அதனால் படத்தில் நடித்த தினேஷின் வீடு முழுக்க விஜயகாந்த் படங்கள், ஸ்டிக்கர்ஸ், விஜயகாந்த் பாடல்கள் என அனைத்திலும் அவருடைய நினைவுகளை லப்பர் பந்து படம் மீட்டெடுக்கும்” என்று பேசியுள்ளார்.
இதன் மூலம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. மேலும் இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாஷிகா விஜய் தேவதர்ஷினி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்திற்கு ஷான் ரோல்டன் இசை அமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.