பிரபல இசையமைப்பாளரான இளையராஜாவின் மகள் பவதாரிணி, கடந்த ஜனவரி 25ஆம் தேதி கல்லீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் இசையின் மீது ஆர்வம் கொண்டு பின்னணி பாடகியாகவும் இசையமைப்பாளராகவும் உருவெடுத்து தான் இசையின் மீது கொண்ட காதலை வெளிப்படுத்தினார். அந்த வகையில் தனது இனிமையான குரலினால் மயில் போல பொண்ணு ஒன்னு, தாலியே தேவையில்ல, ஒளியிலே தெரிவது தேவதையா உள்ளிட்ட பல பாடல்களை பாடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட படங்களில் பல பாடல்களை பாடியுள்ள பவதாரிணியின் மறைவு திரை பிரபலங்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே சமயம் பவதாரிணியின் உடல் இலங்கையில் இருந்து விமானம் மூலம் கொண்டுவரப்பட்டு இளையராஜாவின் மனைவி ஜீவாவின் சமாதிக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் இளையராஜா தனது செல்ல மகள் பவதாரிணியின் கடைசி ஆசையை நிறைவேற்றியுள்ள தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதாவது தந்தை இளையராஜாவுடன் நீண்ட நேரம் செலவழிக்க வேண்டும் என்பதே பாடகி பவதாரிணியின் ஆசையாம். இதனைப் புரிந்து கொண்ட இளையராஜா இலங்கையில் பவதாரிணி தங்கி இருந்த விடுதி அறைக்கு அருகில் உள்ள அறையில் தங்கியது மட்டுமில்லாமல் பவதாரிணியுடன் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் செலவிட்டதாக கூறப்படுகிறது. இது பவதாரணியின் கடைசி ஆசையாக இருக்கும் என்று இளையராஜாவும் நினைத்திருக்க மாட்டார். பவதாரிணியின் மறைவிற்குப் பின் வெளிவந்த இந்த தகவல், பலரையும் கண் கலங்க வைக்கிறது.