நடிகர் சிவகார்த்திகேயனால் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, விநியோகஸ்தர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
கோலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் அயலான். நேற்று இன்று நாளை திரைப்படத்தை இயக்கிய ரவிக்குமார் இத்திரைப்படத்தை இயக்கி இருந்தார். கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து உள்ளது. படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இத்திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த மாதம் 12-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. அயலான் திரைப்படம் குடும்பத்தினர்கள் மத்தியில் நல்ல விமர்சனம் பெற்றது. இருப்பினும் படம் எதிர்பார்த்த அளவு வசூலை பெறாததால், விநியோகஸ்தர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் அயலான் திரைப்படம் சுமார் 55 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இதன் மூலம் விநியோகஸ்தர்களுக்கு 26 கோடி ரூபாய் பங்கீடு கிடைத்துள்ளது. ஆனால், படம் 34 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதால், 8 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
அதேபோல, கேரளாவில் அயலான் படத்தை 75 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியிருந்த நிலையில், 25 லட்சம் ரூபாயை விளம்பரத்திற்காக செலவு செய்துள்ளனர். இறுதியாக 66 லட்சம் ரூபாய் வரை விநியோகஸ்தர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கர்நாடகா மற்றும் வௌிநாடுகளில் அயலான் திரைப்படம் வெளியிடப்பட்ட நிலையில், படத்திலிருந்து லாபம் எதுவும் கிடைக்கவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.