சென்னை அம்பத்தூர் அருகே கொரட்டூரில், நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியின் தொண்டையில் கத்தியால் குத்தி கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அம்பத்தூர் அருகே கொரட்டூர் சிவலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (42). இவரது மனைவி சியாமளா தேவி (36). இவர்களுக்கு 14 மற்றும் 9 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். சுரேஷ் மளிகை கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் பண பற்றாக்குறை காரணமாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மளிகை கடையை மூடியுள்ளார். குடும்ப செலவுக்காக அவரது மனைவி சியாமளா தேவி வீட்டின் அருகே அருகே உள்ள இ சேவை மையத்தில் கடந்த 10 நாட்களாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சியாமளாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு சுரேஷ் அடிக்கடி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். வழக்கம்போல் சுரேஷ்க்கும் அவரது மனைவி சியாமளாவுக்கும் இன்று காலை வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த சுரேஷ் மனைவி சியாமளா தேவியை படுக்கையறைக்கு அழைத்துச் சென்று, கத்தியை எடுத்து தொண்டையில் ஓங்கி குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார். கொலை செய்ய பயன்படுத்திய கத்தியை அங்கேயே வைத்துவிட்டு, வீட்டின் கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டு தப்பி சென்றுள்ளார். தூங்கிக்கொண்டிருந்த சியாமளாவின் மகன்கள் எழுந்து படுக்கை அறைக்கு சென்ற நிலையில், அங்கு இரத்த வெள்ளத்தில் இருந்த சியாமளாவின் உடலைக்கண்டு கதறி அழுதனர். இவர்களின் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்த கதவை திறந்து உள்ளே சென்ற பார்த்த போது சியாமளா உயிரிழந்து கிடந்துள்ளார்.
இது தொடர்பாக கொரட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சியாமளா தேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சியாமளா தேவியின் உறவினர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், கொரட்டூர் கெனால் ரோடு மதுபானக்கூடம் பின்புறத்தில் உள்ள ஏரிக்கரை பகுதியில் பதுங்கி மது அருந்தி கொண்டிருந்த சுரேசை தனிப்படை போலீசார் கைது செய்தனர். நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் கொரட்டூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.