ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் லால் சலாம். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் நேற்று (பிப்ரவரி 9) உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ரஜினி, படத்தில் மொய்தீன் பாயாக கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் நிரோஷா, தம்பி ராமையா, செந்தில், லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். கிரிக்கெட் சம்பந்தமான கதைக்களம் என்பதால் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் கெளரவ தோற்றத்தில் நடித்திருந்தார். லைக்கா ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்திற்கு இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார்.
மதத்தை வைத்து ஆதாயம் தேடும் அரசியல்வாதிகளுக்கு இப்படம் நல்ல பாடமாக அமைந்தது. அந்த வகையில் மத நல்லிணக்கத்தை எடுத்து கூறும் இப்படம் பல்வேறு தரப்பினரிடைய பாராட்டுகளை பெற்று வருகிறது. அதுமட்டுமில்லாமல் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்த காலகட்டத்தில் சொல்ல தயங்கும் கருத்தை மிகத் துணிச்சலாக லால் சலாம் படத்தின் மூலம் கூறியிருக்கிறார். இந்நிலையில் இந்த படம் முதல் நாளில் மட்டும் 5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் கிடைத்துள்ள நிலையில் இனிவரும் நாட்களிலும் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.