விஜய் மற்றும் த்ரிஷா ஆகியோர் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படம் மீண்டும் வெளியாக உள்ளது.
தமிழ் திரையில் லட்சம் திரைப்படங்கள் வெளி வந்தாலும், ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தன. அந்த வகையில் கோலிவுட்டின் அடையாளங்களில் ஒரு முக்கியப் படமாக அமைந்தது கில்லி திரைப்படம். கடந்த 2004-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகி தமிழ் திரையுலகில் மாபெரும் ஹிட் அடித்த திரைப்படம் கில்லி. இத்திரைப்படம் விஜய்யின் சினிமா வாழ்வில் மாபெரும் திருப்பு முனையாக அமைந்தது. வேலு, தனலட்சுமி, முத்துப்பாண்டி ஆகிய கதாபாத்திரங்கள் இன்று வரை தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்படும் கதாபாத்திரங்கள் ஆகும்.
தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான ஒக்கடு படத்தின் ரீமேக் தான் கில்லி படமாகும். இத்திரைப்படம் அப்போதே, சுமார் 50 கோடி ரூபாய் வசூலித்த முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையை பெற்றது. தரணி இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். படத்தில் விஜய்யுடன், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், ஆஷிஷ், தாமு, உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். படத்திற்கு வித்யாசாகர் இசை அமைத்திருந்தார்.
இத்திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், வரும் ஏப்ரல் 17-ம் தேதி கில்லி திரைப்படம் மறுவெளியீடு செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. 4கே டிஜிட்டல் தரத்தில் படம் மீண்டும் திரைக்கு வெளிவர உள்ளது.