ஒரு சில விழாக்கள் மட்டுமே கண்டங்கள் கலந்து அனைத்து மனிதர்களாலும் உணர்வு பூர்வமாக கொண்டாடப்படுகின்றன. அந்த வகையில் உலகில் ஒவ்வொரு உயிரும் அன்பின் உருவமான காதலை சிறப்பிக்க வருடந்தோறும் பிப்ரவரி 14 அன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒருவர் மீது தான் கொண்ட காதலை வெளிப்படுத்த காதலர் தினத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு தான் தெரியும் காதலில் காத்திருப்பதும் சுகம் தான் என்று. காதலர் தினத்தன்று இளமையிலும் முதுமையிலும் இணை பிரியாமல் வாழும் காதலர்கள் தங்கள் துணைகளுக்குப் பல பரிசுப் பொருட்களையும் கொடுத்து மகிழ்வது உண்டு. இந்நிலையில் காதலை கொண்டாடும் விதமாக சினிமா ரசிகர்களுக்கு சிறப்புப் பரிசாக தரமான காதல் திரைப்படங்கள் வெளியாக உள்ளன.
தன்னை மகாராணி என்பதை அறியாமல் காதலிக்கும் ராணுவ வீரனுக்காக அர்ப்பணிப்போடு வாழும் ஒரு பெண்ணின் காதல் கதையை மிக அருமையாக கூறியிருந்த திரைப்படம் சீதாராமம். துல்கர் சல்மான் இந்த படத்தில் கதாநாயகனாகவும் மிர்ணாள் தாகூர் படத்தில் கதாநாயகி ஆகவும் நடித்திருந்தார்கள். காதலர் தின ஸ்பெஷலாக இப்படம் தெலுங்கில் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது. சமீப காலங்களில் வெளியான காதல் படங்களின் மிக முக்கியமான படம் இது.முகம் சுழிக்கும் வகையில் எந்த ஒரு காட்சியும் இல்லாமல் அழகான காதலை கண்முன் காட்டியிருந்தனர். குறிப்பாக படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கண்கலங்காதவர்களே இல்லை என்று கூறலாம். அந்த அளவுக்கு நம்மை உணர்வுப்பூர்வமாக கட்டிப்போட்டிருந்தனர் பிரின்சஸ் நூர்ஜகான் என்ற சீதாவும், ராணுவ வீரனான ராமும்.
ஏற்கனவே விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியாகிய 96 திரைப்படமும் காதலர் தின ஸ்பெஷலாக வெளியாக உள்ளது. அதே சமயம் சீதாராமம் திரைப்படம் வெளியாக உள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.