Homeசெய்திகள்தமிழ்நாடுபட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளை கட்டுப்படுத்தாத தி.மு.க. அரசு - ஓபிஎஸ் கண்டனம்

பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளை கட்டுப்படுத்தாத தி.மு.க. அரசு – ஓபிஎஸ் கண்டனம்

-

சென்னையில் ரவுடிகளின் அட்டூழியம் – ஓ.பன்னீர்செல்வம் வேதனை

பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளை கட்டுப்படுத்தாத தி.மு.க. அரசிற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுநகர் மாவட்டம், சாத்தூருக்கும் சிவகாசிக்கும் இடையே வெம்பக்கோட்டையை அடுத்துள்ள ராமதேவன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள வின்னர் என்ற பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர், 10 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோர் விரைவில் பூரண குணமடைந்து இல்லம் திரும்ப வேண்டுமென்று எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

பட்டாசு ஆலைகளில் அடிக்கடி விபத்து ஏற்படுவதும், அதன்மூலம் உயிரிழப்புகள் ஏற்படுவதும் தமிழ்நாட்டில் தொடர் கதையாக இருந்து வருகிறது. பட்டாசு ஆலைகளில் ஏற்படும் பெரும்பாலான விபத்துகள் மருந்துக் கலவையின்போது ஏற்படும் உராய்வினால் நிகழ்கின்றன. நேற்று ஏற்பட்ட மேற்படி விபத்துக்கும் மருந்து கலவையின்போது ஏற்பட்ட உராய்வுதான் காரணம் என்று கூறப்படுகிறது. பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டிய கடமையும் பொறுப்பும், மாவட்ட நிர்வாகத்திற்கும், தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்திற்கும், ஆலை நிர்வாகத்திற்கும் உண்டு.

ஓ.பன்னீர்செல்வம்

பொதுவாக வெடி விபத்துகள் என்பது மருந்துக் கலவை மேற்கொள்ளும் இடத்தில்தான் நடக்கிறது என்ற நிலையில், தகுதியானோரின் கண்காணிப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் மருந்துக் கலவைப் பணி நடைபெற்றால் விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். இதன்மூலம் உயிரிழப்புகள் ஏற்படுவது தடுக்கப்படும். இதுகுறித்து நான் பலமுறை தி.மு.க. அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளேன். இருப்பினும் எவ்விதமான நடவடிக்கையும் எடுப்பதாகத் தெரியவில்லை. மாறாக, குறைந்த அளவிலான இழப்பீட்டினை மட்டும் தி.மு.க. அரசு அளித்து வருகிறது. இதன் விளைவாக பட்டாசு தொழிற்சாலைகளில் தொடர்ந்து விபத்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. இதன்மூலம், தொழிலாளர்கள்மீது தி.மு.க. அரசுக்கு அக்கறை இல்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது.

தமிழ்நாட்டில் உள்ள பட்டாசுத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில், தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக அதிகாரிகள் முறையாக ஆய்வு மேற்கொள்கிறார்களா என்பதையும், மருந்துக் கலவையினை மேற்பார்வையிட தகுதியானோர் பணியமர்த்தப்பட்டு இருக்கிறார்களா என்பதையும் கண்காணிக்க வேண்டுமென்றும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உயரிய நிவாரணத் தொகையினை வழங்க வேண்டுமென்றும், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளோருக்கு உயரிய சிகிச்சை மற்றும் நிவாரண உதவி அளிக்க வேண்டுமென்றும், மேற்படி விபத்திற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், இனி வருங்காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாவண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டுமென்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

 

 

MUST READ