புதிதாக திருமணம் செய்துகொண்ட ரோகிணி திரையரங்க உரிமையாளர் ரேவந்த் சரணையும், அவரது மனைவியையும் நடிகர் விஜய் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னையில் முக்கிய திரையரங்குகளில் ஒன்று ரோகிணி திரையரங்கம். சென்னை நகரில் பல மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் இருந்தாலும், அனைத்து தரப்பு ரசிகர்களும் ஒன்றாக சேர்ந்து படத்தை கொண்டாடிப் பார்க்கும் திரையரங்கம் என்றால் அது ரோகிணி திரையரங்கம் தான். பெரும் நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகும்போது, ரசிகர்களுக்கெனவே சிறப்பு காட்சிகளை திரையிட்டு, ரசிகர்களை உற்சாகப்படுத்தும் திரையரங்கம் ரோகிணி. விஜய் மற்றும் அஜித்தின் பல ஹிட் திரைப்படங்கள் இந்த திரையரங்கில் வசூல் சாதனைகளை நிகழ்த்தி இரு்ககின்றன. அண்மை காலமாக ஸ்டார் படங்களின் முன்னோட்டமும் திரையிடப்படுகின்றன.
லியோ படத்தின் டிரைலர் வெளியானபோது, ரசிகர்கள் கொண்டாட்டத்தில் திரையரங்கில் இருந்த இருக்கைகளை சேதப்படுத்தியும், திரைச்சீலைகளை கிழித்தும் அட்டகாசத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், ரோகிணி திரையரங்க உரிமையாளர் பன்னீர் செல்வத்தின் மகன் ரேவந்த் சரணின் திருமணம் கடந்த 12-ம் தேதி கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இதில் நடிகர் ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன் உள்பட திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலர் இந்த திருமணத்தில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
நடிகர் விஜய் திருமணத்தில் பங்கேற்பார் என்று எதிர்பார்த்த நிலையில், கோட் பட படப்பிடிப்பால் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால், நடிகர் விஜய், புதுமணத் தம்பதி ரேவந்த் சரணையும் அவரது மனைவியையும் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பான புகைப்படத்தை ரேவந்த் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.