நீதித்துறை அதிகாரம் என்பது யாருக்கும் பதில் சொல்லவேண்டிய பொறுப்பு இல்லாதது என நீதிபதிகள் நினைக்க கூடாது என ஒரிசா மாநில முன்னாள் தலைமை நீதிபதி எஸ். முரளிதர் குறிப்பிட்டுள்ளார்.
அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் சென்னை மாவட்டத்தின் சார்பில் நீதித்துறையின் பொறுப்பு மற்றும் வெளிப்படை தன்மையோடு செயல்படுதல், நேர்மையான நீதித்துறை என்ற தலைப்பிலான கருத்தரங்கம் சென்னை பார் கவுன்சில் அரங்கில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய ஒரிசா மாநில முன்னாள் தலைமை நீதிபதி எஸ் முரளிதர், நமது நீதித்துறையில் நீதித்துறை நேர்மையை பாதித்த சம்பவங்கள் ஏராளமாக உள்ளதாகவும், தர்மசங்கடமான அந்த நிலைமைகள் அதிகமாக இருப்பதால், நீதிபதிகள் அதைச் சமாளிக்க வேண்டிய நிகழ்வுகள் உள்ளதாக தெரிவித்தார். நீதிபதிகளின் குடும்ப உறுப்பினர்கள் அதே நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாக பணிபுரிய கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
நீதிபதிகள் தங்கள் நீதித்துறை அதிகாரம் என்பது யாருக்கும் பதிலளிக்ககூடிய பொறுப்பு இல்லாதது என்று நினைக்கக் கூடாது என்றும், நீதித்துறை நிர்வாகத்தில் உறவினர்கள், வாரிசுகளை நியமிக்கும் சம்பவங்கள் உள்ளதாகவும், திறமையான நீதிபதிகள் இதற்கு எதிராக ஒரு நிலைப்பாட்டை எடுத்து, நீதித்துறை பொறுப்புகளையும், வெளிப்படைத்தன்மையையும் உறுதிசெய்து நீதித்துறையின் மீதான நம்பிக்கையை நிலைநாட்ட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
புதிய குற்றவியல் சட்டங்கள் என்ற தலைப்பில் பேசிய மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, இந்தச் சட்டங்கள் முக்கியமானவை என்பதால், எதிர்க்கட்சிகள் இல்லாத நிலையில், மசோதாக்களை நிறைவேற்றுவதை அரசு நிறுத்தியிருக்க வேண்டும் என்றும், இந்தச் சட்டங்கள் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்காமல் அடிப்படை உரிமைகளைப் பறிக்கக்கூடிய சட்டமாக உள்ளதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது முறையான சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்வதற்கான அடிப்படை உரிமை பறிக்கப்படுவதாக தெரிவித்தார். இந்த சட்டங்களை இப்போது அமல்படுத்த தேவையில்லை என்றும் இந்த சட்டங்களில் நிறைய பிழைகள் உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். இந்த கருத்தரங்க நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்றத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.