மக்களவைத் தேர்தலுக்கான பா.ஜ.க வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், மூன்றாவது முறையாக நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான தயார் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. முக்கிய கட்சிகள் பல வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்வதற்கு முனைப்பு காட்டி வருகின்றன. இந்நிலையில் பா.ஜ.க கட்சியின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. மொத்தம் 195 மக்களவைத் தொகுதிக்கான வேட்பாளர்கள் குறித்த விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக வாரணாசி தொகுதியில் போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014 மற்றும் 2019ம் ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதே வாராணாசி தொகுதியில் போட்டியிட்ட மோடி பெரு வாக்குகளை பெற்று மாபெரும் வெற்றி பெற்றார். அதன்மூலம் அதுவரை வாரணாசி தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராக நிறுத்தப்பட்டு வந்த முரளி மனோகர் ஜோஷியை விடவும் பெற்ற வாக்குகளை விடவும் அதிக வாக்குகளை பெற்று சரித்தர வெற்றியை மோடி 2 முறை பதிவு செய்தார்.
முதற்கட்டமாக வெளியாகியுள்ள பட்டியலில் உத்தரப் பிரதேசத்தில் 51 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. நடப்பாண்டு மக்களவைத் தேர்தலுக்கு பா.ஜ.க சார்பில் 47 இளைஞர்கள், 28 பெண்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் பட்டியலில் 34 மத்திய அமைச்சர்களும் இடம்பெற்றுள்ளனர்.
இதுதவிர மேற்கு வங்காளத்தில் 20 தொகுதிகளுக்கும் மத்திய பிரதேசத்தில் 24 தொகுதிகளுக்கும் குஜராத்தில் 15 தொகுதிகளுக்கும் ராஜஸ்தானில் 15 தொகுதிகளுக்கும் கேரளாவில் 12 தொகுதிகளுக்கும் தெலங்கானாவில் 9 தொகுதிகளுக்கும் அசாமில் 11 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ஜார்கண்ட், சத்தீஸ்கர், டெல்லி, உத்தரகாண்ட், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் குறிப்பிட்ட மக்களவைத் தொகுதிகளுக்கும் பாஜக சார்பில் வேட்பாளர்கள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மத்திய அமைச்சர்களான அமித் ஷா, ராஜ்நாத் சிங், மன்சூக் மாண்டாவியா, ஸ்மிருதி இரானி, பூபேந்தர் யாதவ், கிரண் ரிஜ்ஜு, ஜிதேந்திர சிங் உள்ளிட்டோர் போட்டியிடும் மக்களவைத் தொதிகளுக்கான விபரங்களும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.