விக்ரம் படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்
விக்ரம் நடிக்கும் 62-வது படத்தில் பிரபல மலையாள நடிகர் இணைந்துள்ளதாக, படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ் திரையுலகில் ஹேட்டர்ஸே இல்லாத ஒரு நாயகன் என்றால் அது சியானும் தான். சியான், சியான் என கொண்டாடப்படும் விக்ரம் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அவரது நடிப்பில் இறுதியாக பொன்னியன் செல்வன் திரைப்படங்கள் வெளியாகின. கரிகால சோழனாக விக்ரம் நடித்து பாராட்டைப் பெற்றார். விக்ரம் நடிப்பில் வெளியீட்டுக்கு தயாராகியுள்ள திரைப்படம் தங்கலான். பா ரஞ்சித் இத்திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். படத்தில், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டஜிரோனோ மற்றும் பலர் நடித்துள்ளனர். பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், ஏப்ரல் மாதத்திற்கு தள்ளிப்போனது.
இதையடுத்து, விக்ரம் நடிக்கும் 62 படத்தின் அறிவிப்பு வெளியானது. இந்த படத்திற்கு சியான் 62 என தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத், சித்தா உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண்குமார் இந்த படத்தை இயக்குகிறார். ரியா ஷிபு படத்தை தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் படத்திற்கு இசை அமைக்கிறார். இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து, எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதற்கான அறிவிப்பு அண்மையில் வெளியானது.
இந்நிலையில், இத்திரைப்படத்தில் பிரபல மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இவர் மலையாளத்தில் வௌியாகி பெரும் புரட்சியை ஏற்படுத்திய தி கிரேட் இந்தியன் கிட்சன் படத்தில் நாயகனாக நடித்து பிரபலம் அடைந்தார். இவரும் இப்படத்தில் இணைந்துள்ளதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.