வேட்டையன் படப்பிடிப்பில் கலந்துகொண்ட தெலுங்கு பிரபலம்
- Advertisement -
தமிழ் திரையுலகில் ஸ்டைலுக்கும், மாஸுக்கும் பெயர் போன நடிகர் ரஜினிகாந்த். அந்த பெருமை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு மட்டுமே உண்டு. அவரது நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படம் சுமார் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனையும் படைத்து. இதைத் தொடர்ந்து அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எழுதி இயக்கிய லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் என்ற வேடத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் வேட்டையன். ஜெம்பீம் என்ற வெற்றித் திரைப்படத்தை இயக்கிய ஞானவேல் இத்திரைப்படத்தை இயக்குகிறார். படத்தில் ரஜினிகாந்த் போலீசாக நடிக்கிறார். ரஜினியுடன் சேர்ந்து அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ரித்திகா சிங், ராணா, மஞ்சு வாரியார், துஷாரா விஜயன் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
இப்படத்தின் முதல் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் நெல்லை, கேரளா, தூத்துக்குடி, மும்பை ஆகிய பகுதிகளில் நடைபெற்று முடிந்தது. தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் ஐதராபாத்தில் மாறி மாறி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வேட்டையன் படப்பிடிப்பில் பிரபல தெலுங்கு நடிகர் ராணா டகுபதி கலந்துகொண்டதாக தனது சமூக வலைதளப்பக்கத்தில் அறிவித்துள்ளார். ரஜினிகாந்தும், ராணாவும் இடம்பெறும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.