காவல் அதிகாரிகளுக்கு 15 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படாததால், தமிழக அரசு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகக் காவல்துறையில் உதவி ஆய்வாளர் நிலையில் தொடங்கி கூடுதல் கண்காணிபாளர் நிலை வரையிலான அதிகாரிகளின் பதவி உயர்வு பட்டியல் தயாரிக்கப்பட்டு பல மாதங்களாகியும், அதற்கு அரசு ஒப்புதல் அளிக்காததால் 400&க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கடுமையான மன உளைச்சலும், மனச்சோர்வும் அடைந்துள்ளனர். காவல் அதிகாரிகளின் பதவி உயர்வை தேவையின்றி தாமதப்படுத்துவது கண்டிக்கத்தக்கது. காவல்துறையில் கூடுதல் கண்காணிப்பாளர் நிலையில் உள்ள 25 அதிகாரிகள் கண்காணிப்பாளர்களாகவும், துணை கண்காணிப்பாளர்கள் 100 பேர் கூடுதல் கண்காணிப்பாளர்களாகவும் பதவி உயர்வு பெற வேண்டும். அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டால் ஏற்படும் காலியிடங்களில் 70 ஆய்வாளர்கள் துணைக் கண்காணிப்பாளர்களாகவும், 200 உதவி ஆய்வாளர்கள், ஆய்வாளர்களாகவும் உயர்த்தப்படுவார்கள். இதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்துறை செயலகத்திற்கு அனுப்பப்பட்டு மாதக்கணக்கில் ஆகும் நிலையில் இன்று வரை அப்பட்டியலுக்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை. அதனால் 2024&ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வழங்கப்பட வேண்டிய பதவி உயர்வு 400&க்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்படவில்லை.
காவல்துறை அதிகாரிகளுக்கான பதவி உயர்வு கடந்த சில ஆண்டுகளாகவே தாமதிக்கப்பட்டு வருகிறது. 1996, 1997 ஆகிய ஆண்டுகளில் உதவி ஆய்வாளர்களாக பணியில் சேர்ந்தவர்கள் இப்போது கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களாகவும், துணைக் காவல் கண்காணிப்பாளர்களாகவும் பதவி உயர்வு பெற்று இருக்க வேண்டும். ஆனால், கடந்த 28 ஆண்டுகளில் அவர்களுக்கு ஒரே ஒரு பதவி உயர்வு மட்டுமே வழங்கப்பட்டு, அவர்கள் ஆய்வாளர்களாக பணியாற்றி வருகின்றனர். உடனடியாக அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாவிட்டால், அவர்களில் பலர் ஆய்வாளர்களாகவே ஓய்வு பெறும் நிலை ஏற்படக்கூடும். அதேபோல், உதவி ஆய்வாளர்களுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி உயர்வு வழங்கப் படவில்லை. 15 ஆண்டுகளுக்கு முன் வருவாய்த்துறையில் உதவியாளராக பணியில் சேர்ந்த பலர் வட்ட ஆட்சியராகவும், தலைமை செயலகத்தில் தட்டச்சராக பணியில் சேர்ந்தவர்கள் நிர்வாக அலுவலராகவும் பதவி உயர்வு பெற்று விட்டனர். ஆனால், காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்தவர்கள் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இன்னும் அதே நிலையில் தொடர்கின்றனர். இது மிகப்பெரிய அநீதி ஆகும்.
ஒரு காலத்தில் காவல்துறையில் தான் விரைவாக பதவி உயர்வு கிடைக்கும். காவல்துறையில் பணியிடங்கள் மிகவும் குறைவாக இருந்த காலத்திலேயே உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்த பலர் கண்காணிப்பாளர் நிலையைக் கடந்து காவல்துறை துணைத் தலைவர் (டி.ஐ.ஜி) நிலையை அடைந்த வரலாறுகள் உண்டு. ஆனால், இப்போது உதவி ஆய்வாளராக பணியில் சேரும் ஒருவர் ஆய்வாளர் நிலையில் ஓய்வு பெற வேண்டிய நிலை உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் காவல்துறையில் சேர எவரும் முன்வர மாட்டார்கள். மற்றொருபுறம், காவலர்களாக பணியில் சேர்ந்தவர்களின் நிலையும் மிக மோசமாக உள்ளது. 2021&ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையில், இரண்டாம் நிலைக் காவலர்களாக பணியில் சேருவோருக்கு 7 ஆண்டுகளில் முதல்நிலைக் காவலர்களாகவும், பத்தாண்டுகளில் தலைமைக் காவலர்களாகவும், 20 ஆண்டுகளில் சிறப்பு உதவி ஆய்வாளர்களாகவும் பதவி உயர்வு வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டிருந்தது. ஆனால், திமுக அரசு பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், இன்று வரை பதவி உயர்வு குறித்த அவர்களின் எதிர்பார்ப்பை அரசு நிறைவேற்ற வில்லை. அதனால், காவலர்களாக பணியில் சேர்ந்தவர்கள் காவலர்களாகவே ஓய்வுபெறும் நிலை உள்ளது.
காவல்துறையைப் பொறுத்தவரை இந்திய காவல் பணி அதிகாரிகளுக்கு காலம் சார்ந்த பதவி உயர்வு வழங்கப்படுகிறது. ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் ஒரே ஒரு காவல்துறை தலைமை இயக்குனர் (டி.ஜி.பி) பதவி தான் இருந்தது. ஆனால், இ.கா.ப. அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்குவதற்காக இப்போது 16 பேருக்கு டி.ஜி.பி. நிலை பதவி உயர்வு வழங்கப்படுகிறது. ஆனால், கண்காணிப்பாளர் நிலைக்கு கீழ் உள்ள காவல் அதிகாரிகளுக்கு இருக்கும் காலியிடங்களுக்கு ஏற்ற அளவில் பதவி உயர்வு வழங்க மறுப்பது நியாயமல்ல. காவல்துறையின் இதயமாக திகழ்பவர்கள் துணை கண்காணிப்பாளர் நிலை முதல் உதவி ஆய்வாளர் நிலை வரை உள்ள அதிகாரிகள் தான். அவர்கள் தான் வழக்கு விசாரணைகளை முன்னெடுப்பவர்கள். அவர்களுக்கு உரிய காலத்தில் பதவி உயர்வு வழங்கினால் தான் உற்சாகத்துடன் பணி செய்வார்கள். அது தான் காவல்துறையின் தீவிர செயல்பாட்டுக்கு வழிவகுக்கும். மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு இன்னும் ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படவுள்ள நிலையில், அதற்கு முன்பாக பதவி உயர்வு அறிவிக்கப்பட வில்லை என்றால், அடுத்த 3 மாதங்களுக்கு பதவி உயர்வு வழங்க முடியாது. அது காவல்துறையினரின் மன வலிமையை குலைத்து விடும். எனவே, மக்களவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.