முதல் முறையாக தெலுங்கில் டப்பிங் பேசும் தீபிகா படுகோன்
தெலுங்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த இந்திய திரையுலகிலும் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு இவரது மார்க்கெட் உச்சத்திற்கு சென்றது. பிரபாஸ் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் சலார். பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்தது. இதையடுத்து, பிரபாஸ் நடிப்பில் கல்கி திரைப்படம் உருவாகி வருகிறது. இந்திய திரை உலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் பான் இந்திய அளவில் உருவாகி வரும் படங்களில் கல்கி திரைப்படம் முக்கியமான ஒன்றாகும்.
இப்படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக கமல்ஹாசன் நடிக்கிறார் . இவர்களுடன் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதாணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். வை ஜெயந்தி மூவிஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின் இயக்குகிறார். மேலும், பிரபல தமிழ் இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசை அமைக்கிறார்.
மிகப்பிரமாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் உருவாகி வரும் இந்த படம் டைம் டிராவல் சயின்ஸ் பிக்சன் கதைக்களத்தில் உருவாகி வருகிறது. இத்திரைப்படம் வரும் மே மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்திற்காக முதல் முறையாக நடிகை தீபிகா படுகோன் தெலுங்கு மொழியில் தனது சொந்த குரலில் டப்பிங் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது