பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று தெரிவித்து பைக் டாக்சிகளுக்கு மாநில அரசு தடை விதித்துள்ளது சமூகவலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
ஆட்டோவுக்கு அடுத்தபடியாக பலரும் பைக் டாக்சி சேவையை பயன்படுத்தி வருகின்றனர். கட்டுப்படியான விலை மற்றும் துரிதமான பயணம் வழங்கக்கூடிய சேவை என்பதால் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில் கூட இதற்கு பயணிகளிடையே நன்கு வரவேற்பு உள்ளது.
கர்நாடகாவில் கடந்த பா.ஜ.க ஆட்சியின் போது ஓலா, ஊஃபர் மற்றும் ரேபிடோ போன்ற பைக் டாக்சி சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. வெறும் பெங்களூரு மட்டுமின்றி கர்நாடகாவின் பல்வேறு நகரங்களிலும் இந்த சேவை நடைமுறையில் உள்ளது.
பைக் டாக்சி சேவையால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி ஆட்டோ ஓட்டுநர்கள் பலர் எதிர்ப்பு கூறி வந்தனர். ஆனால் பா.ஜ.க ஆட்சியில் அவர்களுடைய எதிர்ப்புகள் எதுவும் கண்டுக்கொள்ளப்படவில்லை. தொடர்ந்து பலரும் இந்த சேவையை பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் பெங்களூருவில் இரவில் பைக் டாக்சி மூலம் பயணித்த பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் தொடர்ந்து அதிகரித்தது. இந்த விவகாரம் பெங்களூருவில் விஸ்வரூபம் எடுத்தது. பலரும் பைக் டாக்சி சேவையை பயன்படுத்தக் கூடாது என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதையடுத்து பைக் டாக்சி போக்குவரத்து பெண்களுக்கு பாதுகாப்பற்றதாக உள்ளதால், அது கர்நாடகாவில் தடை செய்யப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து கர்நாடகா அரசின் போக்குவரத்து துணை செயலர் புஷ்பா வெளியிட்டுள்ள அறிக்கையில், இருசக்கர வாகன டாக்சிகள் தேவையா என்பது குறித்து ஆராய்வதற்கு குழு அமைக்கபப்ட்டது. அந்த சேவை மக்களுக்கு பெரிதும் உதவவில்லை என்று தெரிவித்துள்ளனர். அதன்காரணமாக கர்நாடகாவில் பைக் டாக்சிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.