முன்னொரு காலத்தில் வயதானவர்களுக்கு மட்டும் ஏற்படும் இருதய கோளாறுகள் தற்போது இளைஞர்களையும் பெரிதளவில் பாதிக்கிறது. அதற்கு முக்கிய காரணம் மாறிவரும் உணவுப் பழக்க வழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை. அவசர உலகத்தில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை தேடி உண்ண முடியாத நிலை உருவாகிவிட்டது. இருப்பினும் சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பதற்கேற்ப உடல் நலம் ஆரோக்கியமாக இருந்தால் தான் நம் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ முடியும். உடலின் முக்கிய உறுப்பான இதயத்தை பாதுகாக்க தேவைப்படும் சில உணவுப் பொருட்களை இங்கு பட்டியலிடுகிறோம்.
பச்சை காய்கறிகள் ஆரோக்கியமான இதயத்திற்கு மிகச்சிறந்தவை. காய்கறிகளை வேக வைத்து சாப்பிடுவதன் மூலம் அதிலுள்ள வைட்டமின்கள் பல நீரில் கரையும் நிலை உருவாகும். இதனை தவிர்ப்பதற்காக பச்சை காய்கறிகளை உண்பதன் மூலம் இதயத்திற்கு தேவையான ஆற்றலை பெற முடியும்.
மீன் எண்ணெயை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒமேகா கொழுப்பு அமிலங்கள் மீன் சார்ந்த உணவுப் பொருள்களில் அதிகம் உள்ளது. இது இதயத்திற்கு வலுக்கொடுக்கும் தன்மையை உடையது.
கீரைகளில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளதோடு உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்கும் தன்மையையும் உடையது. இவை இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாய்களில் இருக்கும் கொழுப்புகளை குறைத்து இதயத்துக்கு நன்மை கொடுக்கிறது.
தினமும் ஒன்று முதல் நான்கு பாதாம் பருப்புகளை சாப்பிட்டு வருவதன் மூலம் கெட்ட கொழுப்பை நீக்க முடியும்.
மிகவும் எளிமையாக கிடைக்கக்கூடிய சர்க்கரை வள்ளி கிழங்கு, நார்ச்சத்து, வைட்டமின் ஏ, லைக்கோ ஃபின்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. இதுவும் இதயத்திற்கு மிகவும் அவசியமானது.
வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு பழம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு இதில் உள்ள பொட்டாசியம், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது.
சிகப்பு செடி பழங்கள் மற்றும் ப்ளூபெர்ரி பழங்களும் ஆன்தோசயனின் அதிகம் கொண்டிருப்பதால் இவை இரத்த குழாய்களுக்கு தொற்று ஏற்படாமல் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கும்.