கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடத்திற்கு கூடுதல் வசதிகள் ஏற்படுத்தித் தர 14 கோடியே 59 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (13.03.2024) கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியில் நடைபெற்ற கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கான முடிவுற்ற பணிகள் திறப்பு விழா, புதிய திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா ஆகிய அரசு விழாக்களில் பங்கேற்று, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தார்.
அச்சமயம், பொள்ளாச்சியில் தற்போது கட்டப்பட்டு வரும் 10 நீதிமன்றங்கள் மற்றும் 5 நீதிபதிகள் குடியிருப்புகள் அடங்கிய ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடத்திற்கு கூடுதல் வசதிகள் (Additional Amenities) செய்து தரவேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. அக்கோரிக்கையினை பரிசீலனை செய்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள், மேற்படி ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடத்திற்கு கூடுதல் வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்கு ஏதுவாக, 14 கோடியே 59 இலட்சம் ரூபாய் நிதி ஒப்பளிப்பு செய்து இன்று (14-3-2024) ஆணையிட்டுள்ளார். எனக் குறிப்பிட்டுள்ளார்.