சமீப காலமாக திரைத்துறையில் மல்டி ஸ்டாரர் படங்கள் தான் பெரும் வரவேற்பை பெறுகின்றன. அதன்படி தற்போது தமிழ் சினிமாவிலும் பல மல்டி ஸ்டாரர் படங்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெறுகிறது. அந்த வகையில் தான் வளர்ந்து வரும் இளம் நடிகர்களான அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் ஆகியோரின் கூட்டணியில் போர் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை பிஜோய் நம்பியார் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் சஞ்சனா நடராஜ், ஜான் விஜய், விவேக் ராஜகோபால், பானு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். டி சீரிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. கல்லூரியில் படிக்கும் மாணவர்களில் சீனியர் ஜூனியர் இருவருக்கும் இடையேயான ஈகோ சம்பந்தமான கதைக்களத்தில் இந்த படம் உருவாகியுள்ளது. அதே சமயம் ஆக்ஷன் காட்சிகளும் படத்தில் இடம்பெற்றுள்ளது.இந்த படம் கடந்த மார்ச் 1ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் தற்போது இந்த படம் நெட்பிளக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
அர்ஜுன் தாஸ், கைதி மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் மூலம் பிரபலமடைந்து தற்போது ஹீரோவாக களமிறங்கி பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் கலக்கி வருகிறார். நடிகர் காளிதாஸ் ஜெயராம் பாவ கதைகள் படத்தில் திருநங்கையாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். தற்போது இவர் தனுஷுடன் இணைந்து ராயன் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.