நடிகர் ரஜினிகாந்த் மஞ்சும்மெல் பாய்ஸ் படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார்.
கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி வெளியான மஞ்சும்மெல் பாய்ஸ் திரைப்படம் மிகக்குறைந்த நாட்களில் அதிவேகமாக 200 கோடியை வாரிக் குவித்து வரலாற்று சாதனை படைத்துள்ளது. தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 800 திரையரங்குகளில் திரையிடப்பட்ட இந்த படம் தமிழகத்தில் மட்டுமே 60 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எமோஷனல் கலந்த கதை களத்தில் உருவாகியிருந்த இந்த படம் தற்போது வரையிலும் பல்வேறு திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தை பரவா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. சுசின் ஷியாம் இசையமைக்க சைஜூ ஹாலித் ஒளிப்பதிவு செய்து இருந்தார். படத்தில் சௌபின் சாகிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ், லால் ஜூனியர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். மேலும் இந்த படம் வருகின்ற ஏப்ரல் 5ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. அதைத் தொடர்ந்து ஏப்ரல் 6ஆம் தேதி தெலுங்கில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே இந்த படத்தை ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலக பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின், விக்ரம், தனுஷ், கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்டோர் படத்தை பாராட்டி பட குழுவினரை வாழ்த்தி உள்ளனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், மஞ்சும்மெல் பாய்ஸ் பட குழுவினரை நேரில் சந்தித்து வாழ்த்து கூறியுள்ளார். இது சம்பந்தமான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.