2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினாரே, செய்தாரா என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜக ஆட்சியை பிடிக்காது! மோடிக்கு கிடைத்த அதிர்ச்சி ரிப்போர்ட்!
18 வயது நிறைந்து முதல்முறையாக வாக்களிக்கச் செல்லும் இளைஞர்கள் தங்கள் எதிர்காலம் கருதி இந்தியா கூட்டணிக்கே வாக்களிக்கவேண்டும் என்பதற்கான காரணத்தை விளக்கி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “18 ஆவது பொதுத் தேர்தல் – 2024 ஏப்ரல் தொடங்கி ஜூன் ஒன்றாம் தேதிவரை நடந்து ஜூன் 4 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவிருக்கின்றன! முதன்முறை வாக்களிக்கப் போகும் இளைஞர்களின் கவனத்திற்கு…! உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று பெருமைப்படும் நம் நாட்டுத் தேர்தலில், 18 வயது நிரம்பிய இளைஞர்கள், முதல்முறையாக வாக்களிக்க இருப்பவர்களின் எண்ணிக்கை 10.9 லட்சம் பேர் ஆவர் (தமிழ்நாட்டில்).
பல்வகை சோதனைகள், கஷ்ட நஷ்டங்கள், தடைகளை (ஜாதி, வறுமை, வாய்ப்பின்மை காரணமாக)த் தாண்டி தங்களது வாழ்க்கையில் இனிதான் வசந்தத்தைச் சந்திக்கப் போகிறோம் என்று கனவு கண்டு, வாக்குச் சாவடிக்குச் சென்று, முதல்முறையாக ஒரு விரல் புரட்சி செய்ய ஆயத்தமாகும் இளைஞர்கள், தங்களது வாக்குகளை நன்கு நிதானித்து, பலமுறை சிந்தித்து, நாட்டின் நிலைமை, அறிவார்ந்த பெருமக்கள், கட்சிசாரா பொதுநிலை அறிஞர்கள் பா.ஜ.க. ஆட்சியை எடை போட்டுப் பார்த்துத் தந்துள்ள செய்திகளையும், நமது வாழ்வுரிமைக்குக் காவல் அரணாகிய, நாம் இறுதியாக எங்கு சென்று நீதியின் கதவைத் தட்டுகிறோமோ, அந்த உச்சநீதிமன்றம் அண்மைக்காலத்தில் மோடி அரசைப் பற்றித் தந்துள்ள தீர்ப்புகளையும், எதேச்சதிகாரத்திற்கும், ஜனநாயகத்திற்கும் இடையிலான தேர்தல்!
‘விஸ்வ குரு’ என்று தன்னைத்தானே தட்டிக்கொடுத்துக் கொள்ளும் இந்த அரசின் ஆளுமையில் வெளிப்படைத்தன்மை உள்ளதா? சொன்னதை செய்துள்ளதா? என்றும், பிரதமர் நரேந்திர மோடி ஏற்கெனவே தந்த வாக்குறுதிகளை கேரண்டீகளைக் கொஞ்சமாவது நிறைவேற்றி இருக்கிறாரா? காற்றில் பறக்கவிட்டிருக்கிறாரா? என்பதையும், அதேநேரத்தில் ‘திராவிட மாடல்’ ஆட்சி இளைஞர்களின் வேலை வாய்ப்பில் செய்துள்ள சாதனைகள், இரண்டையும் சீர்தூக்கிப் பார்த்து, ஒரு கணம் சிந்தித்து, கவனச் சிதறல் இன்றி வாக்களிக்கத் தவறாது முன்வரவேண்டும்.
இந்தத் தேர்தல் எதேச்சதிகாரத்திற்கும், ஜனநாயகத்திற்கும் நடக்கும் அறப்போர் ஆகும்! மதவெறி, ஜாதி வெறி, பண வெறி, பதவி வெறி இவற்றை ஊக்கப்படுத்தி, பாதுகாத்து, 70 சதவிகிதம் கார்ப்பரேட்டுகளுக்கு நாட்டின் முக்கிய அமைப்புகளைத் தாரைவார்த்துள்ள பா.ஜ.க.வின் ஆட்சி 10 ஆண்டுகாலமாக நடைபெறுகிறது; மீண்டும் மகுடம் சூட்டிக்கொள்ள மாய்மால வார்த்தைகளை, வாக்குறுதிகளை, கேரண்டீகளாக விளம்பர வெளிச்சத்தில் ஜொலித்தும் மகிழ்கிறது!
பிரச்சாரத்திற்கு செல்ல தயங்கும் மோடி! உளவுத்துறை ஷாக் ரிப்போர்ட்
‘விளம்பர மாடலு’க்கும், ‘திராவிட மாடலு’க்கும்தான் போட்டி! உங்களை திசை திருப்ப, பல புனைவுகளை, பொய்ச் சரடுகளை, சமூக வலைதளங்களில் வெளியிட்டு, ஏமாற்ற முயல்கிறார்கள். மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்து, அங்கே பொத்தானை அழுத்தும் முன் நன்கு ஆழமாக சிந்தித்த பிறகே, அதை அழுத்தினால் உங்கள் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கும்!
தொழிலாளர்கள் பன்னாட்டுக் கூட்டமைப்பும் – மனிதவள மேம்பாட்டுத் துறையும் இணைந்த ஆய்வு அறிக்கை என்ன கூறுகிறது? ‘‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்‘’- இது இளைஞர்களே, நீங்கள் அறிந்த பழமொழிதான். ஆண்டுதோறும் 2 கோடி பேருக்கு வேலை தரப்படும் என்று 2014 இல் பதவிக்கு வருவதற்கு உங்கள் நாக்கில் தேன் தடவி, மக்கள் காதுகளில் பூச்சுற்றினார்களே, அது என்னாயிற்று? அதன்படி நடந்ததா? நடந்திருந்தால், கடந்த 10 ஆண்டுகால ஒன்றிய ஆட்சியில், 20 கோடி பேருக்கு வேலை கிடைத்து, அதன்மூலம் 20 கோடி குடும்பங்களில் வறுமை, வேலையில்லா கொடுமைகள் ஒழிந்திருக்குமே! இப்போதைய (2024) நிலவரம் என்ன?
தொழிலாளர்கள் பன்னாட்டு கூட்டமைப்பும், மனித வள மேம்பாட்டு நிறுவனமும் இணைந்து நடத்திய ஆய்வுபற்றிய அறிக்கை ‘‘The India Employment Report 2024’’ என்ற தலைப்பில், (இந்தியாவில் வேலை வாய்ப்பு நிலை அறிக்கை- 2024) வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 80 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்புத் தேடி வரும் கூட்டத்தில் சேர்ந்து கொண்டே இருக்கிறார்கள்!
இந்தியாவில் வேலை வாய்ப்பு கிடைக்காத இளைஞர்கள் 83% வேலை வாய்ப்புகள் பிரகாசமானதாக இல்லை; ஏமாற்றமளிப்பதாகவே உள்ளன. இந்தியாவில் வேலை வாய்ப்பே கிடைக்காமல் அவதியுற்று வரும் மக்களுள் 83 சதவிகிதத்தினர் இளம்வயதினர் என்று அந்த ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. உயர்நிலைப்பள்ளிக் கல்வியும், அதற்கு மேலும் கல்வி கற்றவர்கள் 2000 ஆம் ஆண்டில் 35.2 சதவிகிதத்தினர் வேலையில்லாமல் இருந்தனர்.
2022 ஆம் ஆண்டில் இவர்களின் எண்ணிக்கை 65.7 சதவிகிதமாக இருமடங்கு அதிகரித்துள்ளது என்பது அதிர்ச்சியூட்டக் கூடிய தகவல். 2014 ஆம் ஆண்டுமுதல் பிரதமர் மோடியின் ஆட்சியின் சாதனை – வேலைவாய்ப்பில் இதுதானா? (ஜி.எஸ்.டி., பண மதிப்பிழப்பு, கரோனா கால வேலை இழப்புகளிலிருந்து நாடும், நாட்டில் உள்ள இளைஞர்களும் சிறுகுறு தொழில் செய்வோர் மீளவேயில்லை என்பது கூடுதல் வேதனை). இருந்த வேலைகளையும் இழந்துள்ளனர் என்பது கொதிக்கும் எண்ணெய் வாணலியிலிருந்து நெருப்பில் விழுந்த கதை போன்றது!
சுவர் இடிந்து விழுந்து விபத்து- 5 பேர் உயிரிழப்பு!
எழுதப் படிக்கத் தெரியாதோர், வேலை வாய்ப்பின்மை 3.4% படித்த இளைஞர்கள் இத்தனைப் பேர் வேலை வாய்ப்பை இழந்த நிலை ஒருபுறம். மற்றொரு புறம் எழுதப் படிக்கத் தெரியாத 3.4 சதவிகிதத்தினர் வேலையில்லாமல் திண்டாடுகிறார்கள்! பட்டதாரி இளைஞர்களின் எண்ணிக்கை இவர்களைக் காட்டிலும் ஏறத்தாழ ஒன்பது மடங்கு அதிகம்! 29.1 சதவிகித பட்டதாரி இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி அவதிப்பட்டுக் கொண்டு இருப்பதாக நாமல்ல, எதிர்க்கட்சிகளின் கற்பனையல்ல! ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
புதிதாக வேலை வாய்ப்பை உருவாக்காதது மட்டுமல்ல, இருந்த பணியிடங்களையே மோடி அரசு நிரப்பவில்லை.‘‘கடந்த 10 ஆண்டுகளில் நிரப்பப்படாத ஒன்றிய அரசின் 30 லட்சம் பணியிடங்களை இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நிரப்பப்படும்‘’ என்று ராகுல் காந்தி கூறியிருக்கிறார். எனவே, இளைஞர்களே! வாக்குச் சாவடிக்குள் நுழையும் முன் இதை மறவாதீர்!
‘திராவிட மாடல்’ அரசைப் பாராட்டிய ‘நியூயார்க் டைம்ஸ்!’ நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் ‘திராவிட மாடல்’ ஆட்சிபற்றி அமெரிக்க ‘நியூயார்க் டைம்ஸ்’ ஏடு, மனிதவள மேம்பாட்டில், தமிழ்நாடு சிறப்பாக செயல்படுகிறது என்று தனது தலையங்கத்தில் எழுதி பாராட்டுகிறது! காரணம், தமிழ்நாடு அமைதிப் பூங்கா; ஜாதி, மதக் கலவரம் இல்லா மாநிலம்!
நேற்று (மார்ச் 30) சேலம் மாவட்டம், பெத்தநாய்க்கன்பாளையத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கூறியதாவது, ‘‘தமிழ்நாட்டின் பொற்காலம்‘’ என்பது தி.மு.க. ஆட்சிதான்! தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கியது தி.மு.க. ஆட்சியில்தான்! தமிழ்நாட்டின் கல்வி அறிவு உயர்வுக்கு வித்திட்டது தி.மு.க. ஆட்சிதான்! தமிழ்நாட்டுக்கு எண்ணற்ற முத்திரைத் திட்டங்களை நிறைவேற்றியது தி.மு.க. ஆட்சியில்தான்! இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தது தி.மு.க. ஆட்சிதான்.
அண்மையில் ஒரு செய்தியைப் படித்திருப்பீர்கள். உலகத் தொழிலாளர் அமைப்பு அண்மையில் வெளியிட்ட புள்ளிவிவரம் ஒன்றில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்திருக்கிறது என்று சுட்டிக் காட்டியிருக்கிறது. அதில், 83 விழுக்காடு இளைஞர்கள் வேலையின்றித் தவிப்பதாக வேதனையான செய்தியை வெளியிட்டிருக்கிறது. போலியான பிம்பங்களால் கட்டமைக்கப்பட்ட ‘மோடி மாடல்’ இன்றைக்கு அம்பலப்பட்டு நிற்கிறது.
பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் – குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.10 லட்சம் சன்மானம்!
அதேசமயம், எல்லோருக்கும் எல்லாம் என்ற கொள்கையில் நாம் செயல்படுத்தி வரும் ‘திராவிட மாடலில்’ தமிழ்நாடு எத்தகைய வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது என்பதை இந்த நேரத்தில் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். அதுவும், ஒன்றிய அரசின் புள்ளிவிவரம் ஒன்றை வைத்தே இதனை எடுத்துச் சொல்ல விரும்புகிறேன். பத்தாண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சி சீரழித்த தமிழ்நாட்டை மீட்டுக் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பல்வேறு தொழிற்சாலைகளைத் தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இதனால், வேலைவாய்ப்பைப் பெற்ற இளைஞர்கள் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் அக்கவுண்ட் தொடங்கியிருக்கிறார்கள்.
இப்படி, கடந்த மூன்று ஆண்டுகளில் கிடைத்திருக்கும் வேலைவாய்ப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா? நமது அரசு பொறுப்பேற்ற இந்த மூன்று ஆண்டுகளில் 77 இலட்சத்து 78 ஆயிரத்து 999 புதிய வேலைவாய்ப்புகள் தனியார் துறைகளில் உருவாக்கப்பட்டிருக்கிறது என்று அந்தப் புள்ளி விவரம் சொல்கிறது. இப்படி திட்டங்களாலும் -செயல்பாடுகளாலும் உண்மையாகவே சாதனைகளை நிகழ்த்தும் மாடல்தான் நமது ‘திராவிட மாடல்’’’ என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாடு மண் – தந்தை பெரியார் மண் – சமூகநீதி மண்! யோசித்து முடிவு செய்யும் உரிமை உங்களுடையது!.” இவ்வாறு அறிக்கையில் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.