திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் நல்லிக்கவுண்டன் நகர் பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் தனது குடும்பத்தினருடன் திருக்கடையூர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக காரில் சென்றுள்ளார். காரை அவரது இளைய மகன் இளவரசன் ஓட்டிச் சென்றுள்ளார். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். இவர்கள் பயணம் செய்த கார் வெள்ளக்கோவில்-காங்கேயம் தேசிய நெடுஞ்சாலையில் ஓலப்பாளையம் என்ற பகுதியில் வந்துகொண்டிருந்த போது எதிரே வந்த அரசு பேருந்தும், இவர்களது காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் சந்திரசேகரன் அவரது மனைவி, மூத்த மற்றும் இளையமகன், மூத்த மகனின் மனைவி மற்றும் அவரது 3 மாத குழந்தை ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் சசிதரன் என்பவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் போக்குவரத்தை சீர்செய்தனர்.