ரம்ஜான் பண்டிகையையொட்டி, இஸ்லாமியர்களுக்கு அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை உற்சாகக் கொண்டாட்டம்!
இது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “ஈகைத் திருநாளை இன்பமுடன் கொண்டாடும் எனது அன்புக்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் உளங்கனிந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
புனித ரமலான் மாதத்தில் இஸ்லாமியப் பெருமக்கள் ஒரு மாதம் நோன்பிருந்து, ஏழைகளின் பசி துன்பத்தைத் தாமும் அனுபவித்து, ஏழை, எளியோருக்கு உணவளித்து, எல்லோரும் எல்லா நலமும் பெற்று இன்புற்று வாழ்ந்திட இறைவனைத் தொழுது, ரம்ஜான் பண்டிகையை சிறப்புடன் கொண்டாடி மகிழ்வார்கள்.
அ.தி.மு.க. ஆட்சிக் காலங்களில் இஸ்லாமிய மக்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு சிறுபான்மை மக்களின் நலன் பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்பதையும்; கழகம் என்றென்றும் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழும் என்பதையும், இந்த இனிய தருணத்தில் பெருமையோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
ரம்ஜான் பண்டிகை- சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள்!
“அனைவரிடத்திலும் அன்பு காட்டுங்கள்; பிறருக்கு உதவி புரியுங்கள்; சகோதரத்துவத்துடன் வாழ்ந்திடுங்கள்” என்ற நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளை மனதில் கொண்டு வாழ்ந்திட உறுதியேற்போம் என்று கூறி, இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது நல்வழியில், எனது இனிய ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
புனித நூலான திருக்குர்ஆன் அருளப்பட்ட இந்த மாதத்தில், தமிழ்நாட்டில் தீமைகள் ஒழிந்து நன்மைகள் மீள, நாம் அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்வோமாக!” என்று குறிப்பிட்டுள்ளார்.