காணாமல் போன நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி சடலமாக மீட்கப்பட்டிருப்பது காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்டத் தலைவராக இருந்தவர் ஜெயக்குமார் தனசிங். இவர் மே 02- ஆம் தேதி முதல் காணவில்லை என அவரது மகன் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், உவரி அருகே உள்ள கரைசுத்துபுதூரில் உள்ள தோட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக நெல்லை மாவட்ட காவல்துறை எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார். இதனிடையே, தடய அறிவியல் நிபுணர்களை வரவழைத்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது காவல்துறை.
தன்னை கொலை செய்ய சிலர் திட்டமிட்டு வருவதாக முன்னதாகவே ஜெயக்குமார் தனசிங், காவல்துறைக்கு கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நெல்லை சென்ற பிறகே நடந்தது என்ன என்பது தெரிய வரும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.