மீண்டும் கலகலப்பு படக் கூட்டணி இணைய உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருபவர் சுந்தர் சி. இவர் நடிப்பில் கடந்த ஆண்டு தலைநகரம் 2 திரைப்படம் வெளியானது. அதை தொடர்ந்து இந்த ஆண்டில் சுந்தர் சி இயக்கத்திலும் நடிப்பிலும் வெளியான திரைப்படம் அரண்மனை 4. தமன்னா, ராஷி கண்ணா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றிப்பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டியில் சுந்தர் சி, தன்னுடைய அடுத்த படம் கலகலப்பு 3 என்று அப்டேட் கொடுத்துள்ளார். அதாவது கடந்த 2012 இல் விமல், மிர்ச்சி சிவா, அஞ்சலி, ஓவியா, சந்தானம் ஆகியோரின் நடிப்பில் வெளியான கலகலப்பு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மீண்டும் இந்த கூட்டணி கலகலப்பு 3 படத்தில் இணைய உள்ளதாம். அதன்படி விமல் மற்றும் சிவா ஆகியோர் கலகலப்பு 3 படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளார்கள் என்று சுந்தர் சி தெரிவித்துள்ளார். அதே சமயம் தற்போது ஸ்கிரிப்ட் எழுதும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார். எனவே மற்ற நடிகர், நடிகைகள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.